தனியார் நிறுவன ஊழியர் மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம்; மகளை அடைய முயன்றதால் கள்ளக்காதலியே தீர்த்துக்கட்டினார்
கலபுரகியில் தனியார் நிறுவன ஊழியர் மர்மசாவில், அவரை கொலை செய்ததாக கள்ளக்காதலி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மகளையும் அடைய விரும்பியதால் தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.
கலபுரகி:
நிர்வாணமாக தொங்கினார்
கலபுரகி மாவட்டம் கமலாபுரா தாலுகா நவதகி கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா. இவர், தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். சித்தப்பாவுக்கு திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நவதகி கிராமத்தில் உள்ள ஒரு மரத்தில் சித்தப்பா நிர்வாண நிலையில் தூக்கில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்ததும் கமலாபுரா போலீசார் விரைந்து சென்று சித்தப்பா உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
சித்தப்பா நிர்வாண நிலையில் தூக்கில் தொங்கியதால், அவர் தற்கொலை செய்ய வாய்ப்பில்லை என்றும் போலீசார் கருதினார்கள். அவரை கொலை செய்து மர்மநபர்கள் தூக்கில் தொங்க விட்டு இருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. சித்தப்பாவின் மர்மசாவு குறித்து கமலாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கள்ளக்காதலி கைது
இந்த நிலையில், போலீஸ் விசாரணையில் சித்தப்பா தற்கொலை செய்யவில்லை என்பதும், அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதும் உறுதியானது. மேலும் சித்தப்பாவை கொலை செய்ததாக அதே கிராமத்தை சேர்ந்த அனுசியா, அவரது கள்ளக்காதலன் சிவக்குமார் மற்றும் கோவிந்த் ஆகிய 3 பேரையும் கமலாபுரா போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது அனுசியாவின் கணவர் இறந்து விட்டார். அதன்பிறகு, சித்தப்பாவுக்கும், அனுசியாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதற்கிடையில், அனுசியாவின் மகளையும் சித்தப்பா அடைய விரும்பி உள்ளாா். மேலும் அனுசியாவின் மகளுக்கும், சித்தப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சித்தப்பாவுடன் பழகுவதை தவிர்த்து வந்த அனுசியாவுக்கு சிவக்குமாருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
மகளை அடைய முயன்றதால்...
ஆனாலும் அனுசியாவின் மகளை அடைய முயற்சிப்பதை சித்தப்பா நிறுத்தாமல் இருந்துள்ளார். இதையடுத்து, தன்னுடைய மகளை அடைய முயலும் சித்தப்பாவை கொலை செய்ய அனுசியா தனது மற்றொரு கள்ளக்காதலனான சிவக்குமாருடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளனர். இதற்கு அவரும் சம்மதித்துள்ளார். இதற்காக தோட்டத்திற்கு உல்லாசம் அனுபவிக்க வரும்படி சித்தப்பாவுக்கு அனுசியா தெரிவித்துள்ளார். அதன்படி, அவரும் அங்கு சென்றுள்ளார்.
2 பேரும் உல்லாசம் அனுபவித்த போது, அங்கு வந்த சிவக்குமார் இரும்பு கம்பியால் சித்தப்பாவின் தலையில் தாக்கி கொலை செய்திருக்கிறார். பின்னர் நிர்வாணமாக கிடந்த சித்தப்பாவின் உடலை தோட்டத்தின் அருகே உள்ள மரத்தில் கட்டி தொங்கவிட்டது தெரியவந்துள்ளது. இந்த கொலைக்கு அனுசியாவுக்கும், சிவக்குமாருக்கும் கோவிந்த் தேவையான உதவிகளை செய்து கொடுத்ததும் தெரியவந்துள்ளது. கைதான 3 பேர் மீதும் கமலாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.