அகஸ்தியர் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
அகஸ்தியர் அருவி
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது பாபநாசம் அகஸ்தியர் அருவி. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கும். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வந்து குளித்து விட்டு செல்வார்கள். இதனால் எப்போதும் சுற்றுலா பயணிகளால் நிறைந்து பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகள் கலகலப்பாக காணப்படும்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 1½ ஆண்டுகளுக்கு மேலாக காரையார் அணை, அகஸ்தியர் அருவி போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதியில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
குளிக்க அனுமதிக்கப்படுமா?
தற்போது கொரோனா தொற்று குறைந்ததையடுத்து பள்ளிக்கூடங்கள், திரையரங்குகள், டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் அகஸ்தியர் அருவி இன்னும் திறக்கப்படவில்லை. எனவே இந்த அருவியை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி வியாபாரிகள் கூறுகையில், “விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம் பகுதிகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் அகஸ்தியர் அருவியை நம்பி இருக்கிறோம். இந்த அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான அனைத்து வகையான பொருட்களையும் இங்குதான் வாங்கி செல்வார்கள். தற்போது அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதித்துள்ளதால் வாழ்வாதாரம் இழந்து உள்ளோம். எனவே அகஸ்தியர் அருவிக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல அனுமதிக்க வேண்டும்” என்றனர்.