அரசு போக்குவரத்து அதிகாரிகள் 2 பேர் மீது நடவடிக்கை
மீன் விற்கும் பெண், நரிக்குறவர் குடும்பத்தினர் ஆகியோரை அரசு பஸ்சில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் அடுத்தடுத்து நடந்ததை தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
மீன் விற்கும் பெண், நரிக்குறவர் குடும்பத்தினர் ஆகியோரை அரசு பஸ்சில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் அடுத்தடுத்து நடந்ததை தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து 2 சம்பவங்கள்
குமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியக்குடியை சேர்ந்தவர் செல்வமேரி. இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் குளச்சல் பஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக மீன் கூடையுடன் அரசு பஸ்சில் ஏறினார். அப்போது துர்நாற்றம் வீசுவதாக கூறி அந்த பஸ்சின் கண்டக்டர் செல்வமேரியை பஸ்சில் இருந்து இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதுதொடர்பாக அந்த பஸ்சின் கண்டக்டர், டிரைவர், நேர காப்பாளர் என 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த பரபரப்பு சம்பவம் அடங்குவதற்குள், நேற்று முன்தினம் மற்றொரு சம்பவமும் நடந்தது. அதாவது நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்குபுறப்பட்ட ஒரு அரசு பஸ்சில் வள்ளியூர் செல்வதற்காக ஒரு நரிக்குறவர் குடும்பத்தினர் ஏறியுள்ளனர். பஸ் சிறிது தூரம் சென்றதும் நரிக்குறவர் குடும்பத்தினரில் கணவன்-மனைவிக்கிடையே பஸ்சுக்குள்ளேயே தகராறு ஏற்பட்டுள்ளது.
கண்டக்டர் பணியிடை நீக்கம்
இதனால் பஸ் கண்டக்டர் அவர்களையும், அவர்களுடைய குழந்தையையும் பஸ்சில் இருந்து இறக்கியதோடு, அவர்களுடைய உடைமைகளையும் தூக்கி வீசியதாக தெரிகிறது. இதுதொடர்பான வீடியோவும் நேற்று முன்தினம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து அந்த பஸ்சின் கண்டக்டர் ஜெயதாஸ், டிரைவர் நெல்சன் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் அரவிந்த் உத்தரவிட்டார்.
நரிக்குறவர் குடும்பத்தை நடுவழியில் இறக்கி விட்ட பிரச்சினையில் தொடர்புடைய பஸ் திருவட்டாறு பணிமனையில் இருந்து இயக்கப்பட்டது ஆகும். இதன்காரணமாக அரசு போக்குவரத்து கழக திருவட்டார் கிளை மேலாளர் அனிஷ் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அதிகாரி மீதும் நடவடிக்கை
இவ்வாறு அடுத்தடுத்து 2 சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் நேற்று நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் அரவிந்த் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அவரை பணியில் இருந்து விடுவித்துள்ளனர். இதனால் தற்போது அவர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு இருப்பதாகவும், உடனடியாக அரசு போக்குவரத்து துறை செயலாளரை சந்தித்து விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிகாரி அரவிந்த் நேற்று உடனடியாக சென்னை புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு அவருடைய விளக்கம் ஏற்று கொள்ளப்படும் பட்சத்தில் மீண்டும் நாகர்கோவில் மண்டல பொது மேலாளராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.