சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பிய குமரி என்ஜினீயர் கைது
முப்படை தளபதி பிபின் ராவத் இறப்பு தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்துகளை பரப்பிய குமரி என்ஜினீயரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
நாகர்கோவில்,
முப்படை தளபதி பிபின் ராவத் இறப்பு தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்துகளை பரப்பிய குமரி என்ஜினீயரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
தலைமை தளபதி விபத்தில் சாவு
இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்தவர் பிபின் ராவத். இவர் தனது மனைவியுடன் நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற இருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டார். அந்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது விபத்துக்குள்ளானது.
இதில் தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் என மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர்.
அவதூறு கருத்து
இந்த சம்பவம் குறித்தும், தமிழக அரசு மீதும் குமரி மாவட்டம் புதுக்கடை பகுதியைச் சேர்ந்த சிபிந்த் (வயது 23) என்ற வாலிபர் சமூக வலைத்தளமான டுவிட்டர் மூலம் அவதூறு கருத்துகளை பரப்பியதாக தெரிகிறது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் வந்தன.இதையடுத்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் போலீசார் சிபிந்தை கைது செய்தனர். அவர் மீது பொதுமக்களிடையே கலகத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது, அரசுக்கு எதிராக அவதூறு கருத்துகளை பரப்பியது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்ட சிபிந்த்தை போலீசார் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஜெயிலில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சிபிந்த் என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார்.