தமிழகத்தை பா.ம.க. ஆளப்போவது நிச்சயம் கள்ளக்குறிச்சியில் டாக்டர் ராமதாஸ் பேச்சு

தமிழகத்தை பா.ம.க. ஆளப்போவது நிச்சயம் என கள்ளக்குறிச்சியில் நடந்த பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

Update: 2021-12-10 16:58 GMT
கள்ளக்குறிச்சி, 

ஆலோசனை கூட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணி மேற்கொள்வது தொடர்பாக கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் ராஜா வரவேற்றார்.
மாநில துணை தலைவர் கே.பி.பாண்டியன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஜெகன், தமிழ்வாணன், மாநில மகளிரணி செயலாளர் காசாம்பு பூமாலை, மாவட்ட செயலாளர் சரவணன், மாநில துணைத் தலைவர் மணிகண்டன், முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

குடும்பம் முக்கியம்

சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். 
அப்போது அவர் பேசியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என பா.ம.க. கோரிக்கை வைத்து போராடி வந்தது. இதன் காரணமாக கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக பிரித்துள்ளார்கள். இந்த பெருமை பா.ம.க.வையே சேரும். கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்காக நான் அயராது உழைப்பேன் என உறுதி கூறுகிறேன். 
விரைவில் நடைபெறவுள்ள பேரூராட்சி, நகராட்சி தேர்தலில் பா.ம.க.வுக்கு முழு வெற்றியை தரவேண்டும். நம்மிடம் பணம் இல்லை. ஆனால் மக்களுக்கு சேவை செய்ய நமக்கு நல்ல எண்ணம் உள்ளது. கிராமம், ஒன்றியம், தொகுதி பிரச்சினைகளை தெரிந்து போராடக் கூடியவர்கள் பா.ம.க.வினர். இருப்பினும் நம் கட்சியினருக்கு முதலில் குடும்பம் முக்கியம். பிறகு குடும்பம் நடத்த வருமானம். மீதி இருக்கிற நேரத்தில் கட்சி வேலையை பாருங்கள். விரைவில் மாற்றம் வந்தே தீரும். விரைவில் தமிழகத்தை பா.ம.க. ஆள்வது நிச்சயம். 

நமது ஆட்சி மலர வேண்டும்

32 ஆண்டுகளுக்கு முன்பு பல போராட்டங்கள் நடத்தி 29 உயிர்களை பலி கொடுத்து 20 சதவீத இட ஒதுக்கீடு வாங்கி உள்ளோம். ஆனால் 108 சாதிகள் இதனை அனுபவித்து வருகின்றன. நாம் போராடி பெற்ற 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வாங்கினால் மற்றவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல் கோர்ட்டுக்கு சென்றுள்ளனர். 
இதனை வன்னிய இளைஞர்கள் புரிந்து கொண்டு தம்பி, தங்கைகளை படிக்க  சொல்லுங்கள். குடிக்க வேண்டாம் என சொல்லுங்கள். காவல் நிலையத்தில் யார் மீதும் வழக்கு இருக்கக் கூடாது. நமது ஆட்சி மலர வேண்டும். ஒரு சொட்டு சாராயம் கூட இருக்கக் கூடாது. இதனை இளைஞர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஒரு சொட்டு மது இருக்காது

பா.ம.க.வுக்கு ஒருமுறை வாக்களியுங்கள். அதன்பிறகு நாங்கள் என்ன செய்கிறோம் என்று பாருங்கள். தமிழகம் முழுவதும் ஒரு தாய் மக்கள் என நினைத்து ஒரு வருடத்தில் பொதுநலம் தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிக்கை விட்டுள்ளேன். அதி்ல் 10.5 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமான அறிக்கை மட்டும் தான் சமுதாயத்திற்காக. பா.ம.க. ஆட்சிக்கு வரும்போது ஒரு சொட்டு மது இருக்காது.  
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
முன்னதாக கூட்டத்தில் நகரப்புற உள்ளாட்சி தேர்தல் பணி குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்