செங்கம் அருகே சேறும், சகதியுமான சாலையால் போக்குவரத்து நெரிசல்
செங்கம் அருகே சேறும் சகதியுமான சாலையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சாலையை சீரமைக்க வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கம்
செங்கம் அருகே சேறும் சகதியுமான சாலையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சாலையை சீரமைக்க வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேறும் சகதியுமான சாலை
செங்கம் அருகே உள்ள மேல்செங்கம், தண்டம்பட்டு பகுதிகளில் செல்லும் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சாலையின் இருபுறமும் தோண்டி மண் கொட்டப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக சாலையின் இருபுறமும் கொட்டி வைக்கப்பட்டிருந்த மண் சேறும் சகதியுமாக மாறி வாகனங்கள் செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது.
குறிப்பாக இரவு நேரங்களில் வாகனங்கள் அந்த சாலையில் செல்ல மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றது. நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் 2.30 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து வரிசையாக காத்திருந்தது.
சீரமைக்க கோரிக்கை
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து நீண்ட நேரத்திற்கு பிறகு போலீசார் வந்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் செங்கம் பகுதியில் சேதமடைந்துள்ள மண்மலை, முறையாறு, கரியமங்கலம், கொட்டைகுளம் உள்ளிட்ட பகுதிகளிலும், மேல்செங்கம், தண்டம்பட்டு முதல் சிங்காரப்பேட்டை வரை செல்லும் சாலையையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.