ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

பெரணமல்லூரில் தொகுப்பு வீடு வழங்காததை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-10 16:49 GMT
சேத்துப்பட்டு

பெரணமல்லூரில் தொகுப்பு வீடு வழங்காததை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியத்தில்  உள்ள ஆனைபோகி ஊராட்சி மன்ற தலைவராக ஜெயச்சந்திரன் பதவி வகித்து வருகிறார். ஆனைபோகி ஊராட்சிக்கு உட்பட்ட மேல்செம்பேடு கிராமத்தில் சிலருக்கு தொகுப்பு வீடு வாங்கி தருவதாக ஊராட்சி மன்ற தலைவர் ஜெயச்சந்திரன் கூறி உள்ளார். 
அவர்கள் பலமுறை கேட்டும் எந்த ஒரு தகவலும் கூறாமலும், தொகுப்பு வீடு வாங்கித் தராமல் தட்டிக் கழித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால்  உறவினர்களுடன் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திடீரென தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடு வழங்க வில்லை

இதுகுறித்து தகவலறிந்த பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயச்சந்திரன் எங்களுக்கு தொகுப்பு வீடு வழங்காமல் தட்டிக்கழித்து வருகிறார். மேல் செம்பேடு கிராமத்தில் முள்வெளிகளை ஏலம் விட்டு ஏலத்தில் வந்த ஒருதொகையை ஊராட்சி மன்ற தலைவரிடம் கொடுத்தனர். இதுவரையிலும் அந்த தொகைக்கான ரசீது வழங்கவில்லை. ரசீதை ஊராட்சி மன்ற தலைவரிடம் பெற்றுத்தருமாறு கோரிக்கை வைத்தனர்.

 இந்த புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்தார். இதையடுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்