சட்டத்துக்கு புறம்பாக பயணம் செய்யும் மாணவர்கள் மீது கைது நடவடிக்கை: போலீஸ் சூப்பிரண்டு

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சட்டத்துக்கு புறம்பாக அபாயகரமான பயணம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீசார் எச்சரித்து உள்ளனர்.

Update: 2021-12-10 14:34 GMT
எச்சரிக்கை

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது மெய்யூர். இங்கு கடந்த 2-ந்தேதி அரசு பஸ்சில் ஆபத்தான முறையில் பயணம் செய்த பள்ளி மாணவன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார். அவனது பெற்றோரை வரவழைத்து கடுமையாக எச்சரித்து அறிவுரை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

பட்டா கத்தி

அதேபோல் பெரியகுப்பம் பகுதியில் கடந்த 6-ந்தேதி திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே கும்பலாக நின்று கொண்டிருந்த 8 கல்லூரி மாணவர்களை போலீசார் சோதனை செய்தபோது அவர்களிடம் இருந்து 3 அடி நீளமுள்ள பட்டாக்கத்தி கைப்பற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து அவர்கள் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களின் எதிர்காலம் கருதி அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

ஆபத்தான ரெயில் பயணம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் அபாயகரமாக ஏறியும், கால்களை நடைமேடையில் தேய்த்தபடியும் பயணம் செய்த மாணவர்களை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக அவர்களில் பெற்றோர்கள் முன்னிலையில் ஏற்கனவே ரெயிலில் கவனக்குறைவாகவும் அசட்டையாக பயணம் செய்து அதனால் விபத்துக்குள்ளாகி காயமடைந்த, ஊனமுற்ற மற்றும் இறந்தவர்களின் புகைப்படங்களை காண்பித்து அவர்களை எச்சரித்து அறிவுரை வழங்கி அனுப்பப்பட்டது.

படிப்பில் கவனம்

பள்ளி மற்றும் கல்லூரி பருவங்களில் மாணவர்கள் அவர்களுக்குரிய கடமை மற்றும் பொறுப்பு குறித்து உணர்ந்து தங்கள் படிப்பில் கவனம் செலுத்தி தமது குடும்பத்திற்கும் தம்மை சார்ந்த சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு இன்றி தமது வட்டத்திற்குள் தம்மை உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்வதற்கு இழிவான செயல்களில் ஈடுபடவேண்டாம். தொடர்ந்து பத்திரிகை செய்திகள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும், மாணவர்களின் எதிர்காலம் கருதி கடந்த ஒருமாத காலமாக போதிய அளவு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு

இதனால் ஆரம்பத்தில் இவ்வாறான செயல்களில் ஈடுபட்ட மாணவர்களை நேரில் அழைத்து அறிவுரை வழங்கப்பட்டது. தற்போது கடந்த 2 நாட்களில் மட்டும் 9 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இனிமேலும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கடுமையாக எச்சரித்து உள்ளனர். அவ்வாறு வழக்குப்பதிவு செய்யப்படும் மாணவர்கள் எதிர்காலத்தில் எந்த ஒரு அரசு வேலைக்கு சேரவோ, வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் எடுக்கவோ தகுதி நீக்கம் செய்யப்படுவர்.

தகவல் தெரிவிக்கலாம்

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மேற்கூறிய சட்டத்திற்கு புறம்பாக ஆயுதம் கொண்டு செல்வது பற்றி தெரிந்தாலோ, ஓடும் பஸ் மற்றும் ரெயிலில் அபாயகரமாக பயணம் செய்வது பற்றி தெரிய வந்தாலோ அது குறித்த தகவல்களை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் பிரத்தியேக தொலைபேசி எண்ணு 6379904848-க்கு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்