வேலைக்கு செல்ல சொந்த வாகனம் இல்லாததால் மோட்டார் சைக்கிளை திருடிய என்ஜினீயர்
வேலைக்கு செல்ல சொந்த வாகனம் இல்லாததால் மோட்டார் சைக்கிளை திருடிய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அரும்பாக்கம் போலீசார் நேற்று அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்தார். சந்தேகத்தின்பேரில் அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரிடம் மோட்டார்சைக்கிளுக்கு உரிய ஆவணங்களும் இல்லை. பின்னர் போலீசார் தீவிரமாக நடத்திய விசாரணையில் அவர், அரும்பாக்கம், திருகுமரபுரம் பகுதியை சேர்ந்த கஸ்தூரிராஜன் (வயது 21) என்பதும், மெக்கானிக்கல் என்ஜினீயரான அவர், அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரிந்தது.
வேலைக்கு செல்வதற்கு அவரிடம் சொந்தமாக வாகனம் இல்லாததால் பஸ்சில் சென்று வந்தார். இதனால் சிரமப்பட்டு வந்த கஸ்தூரிராஜன், நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரது மோட்டார்சைக்கிளை திருடி, ஒரு இடத்தில் மறைத்து வைத்துவிட்டு, நேற்று அதை தனது மோட்டார்சைக்கிள் போல் தள்ளி வந்தபோது போலீசாரிடம் சிக்கியது தெரிந்தது.
இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் என்ஜினீயர் கஸ்தூரிராஜனை கைது செய்தனர். திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை அதன் உரிமையாளரான சிவகுமாரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.