ஊட்டியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.42 லட்சம் மோசடி; தம்பதி கைது
ஊட்டியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.42 லட்சம் மோசடி; தம்பதி கைது
ஊட்டி
ஊட்டியில் ஏலச்சீட்டு நடத்தி பணத்தை திரும்ப வழங்காமல் ரூ.42 லட்சம் மோசடி செய்த தம்பதியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
ஏலச்சீட்டு நடத்தினர்
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எச்.பி.எப். பகுதியில் வசித்து வருபவர் தம்மணன் (வயது 62). இவரது மனைவி புட்டம்மா (51). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.
இதை நம்பி எச்.பி.எப். உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட பொதுமக்கள் பணத்தை சேமித்து வைப்பதற்காக ஏலச்சீட்டில் கலந்துகொண்டு மாதந்தோறும் குறிப்பிட்ட பணத்தை கொடுத்து வந்தனர். ரூ.5,000, ரூ.3 ஆயிரம் என தனித்தனி சீட்டுக்காக பொதுமக்கள் பணத்தை கட்டி வந்து உள்ளனர்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏலச்சீட்டு முடிவடைந்தும் பலருக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து கணவன்-மனைவியிடம் பொதுமக்கள் கேட்டபோது இன்னும் சில மாதங்களில் தந்துவிடுவதாக கூறியும் காலம் கடத்தி வந்து உள்ளனர்.
சமீபத்தில் ஊட்டி எச்.பி.எப். பகுதியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அந்த மனுவில், காந்தல் புதுநகர், பிங்கர்போஸ்ட், பைக்காரா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ஏலச்சீட்டில் கலந்துகொண்டு பணத்தை தம்மணனிடம் கொடுத்தனர்.
கணவன்-மனைவி கைது
மேலும் அவரது மனைவி, 2 மகள்களான லட்சுமி (35), கோகிலா (33) ஆகிய 3 பேரும் ஏல பணத்தை வசூலித்தனர். பணத்தை திரும்ப தராமல் எங்களை ஏமாற்றி விட்டனர். நாங்கள் இதை நம்பி பிள்ளைகள் திருமணம் போன்ற செலவுகளுக்காக சேமித்து வைத்தோம்.
எனவே, ஏமாற்றிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில் 18 பேரிடம் ஏலச்சீட்டுக்காக பணத்தை பெற்றுக்கொண்டு திரும்ப வழங்காமல் இருந்ததும், ரூ.42 லட்சம் மோசடி செய்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் தம்மணன், புட்டம்மா ஆகிய 2 பேரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான லட்சுமி, கோகிலா ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.