ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை - தார்வார் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
ஒரே குடும்பத்தில் 3 பேரை சுட்டுக்கொன்ற வழக்கில் ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை விதித்து தார்வார் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
தார்வார்:
ராணுவ வீரர்
தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா பெண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கரப்பா திப்பண்ணா. இவர் இந்திய ராணுவத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் 4 மாதத்திற்குள் அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதற்கு தனது உறவினரான எல்லப்பா பஜாந்திரி தான் காரணம் என சங்கரப்பா எண்ணினார்.
அதுபோல் தனது தாயின் பெயரில் உள்ள சொத்துக்களை தனக்கு எழுதி கொடுக்க எல்லப்பா உதவவில்லை என்றும், அவர் தனக்கு தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் சங்கரப்பா கருதினார். இதனால் எல்லப்பாவை கொலை செய்யும் நோக்குடன் கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 20-ந்தேதி சங்கரப்பா, எல்லப்பாவின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
சுட்டுக்கொலை
அங்கு வைத்து எல்லப்பாவுடன் அவர் தகராறு செய்துள்ளார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சங்கரப்பா திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து எல்லப்பா நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் எல்லப்பா, அவரது மகன் சோமப்பா(வயது 11), மகள் ஐஸ்வர்யா (9) ஆகியோர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.
இதில் எல்லப்பாவின் மனைவி கீதா அதிர்ஷ்டவசமாக தப்பி ஓடி உயிர் பிழைத்தார். மேலும் மதன்குமார் என்பவர் படுகாயம் அடைந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் உடல் நலம் தேறினார்.
ஆயுள் தண்டனை
இந்த 3 கொலைகள் தொடர்பாக குந்துகோல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரப்பாவை கைது செய்திருந்தனர். இந்த கொலை சம்பவம் அப்போது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.
இதுதொடர்பாக தார்வார் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி தேவந்திரப்பா பிரதார் முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பு கூறினார்.
அதில், 3 பேரை சுட்டுக்கொன்ற சங்கரப்பாவுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் ரூ.2.20 லட்சம் அபராதம் விதித்தும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த வழக்கு விசாரணை 11 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.