கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை அறிவிப்பது குறித்து ஒரு வாரத்திற்கு பிறகு முடிவு - பசவராஜ் பொம்மை பேட்டி

கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை அறிவிப்பது குறித்து ஒரு வாரத்திற்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று பசவராஜ் பொம்மை கூறினார்.

Update: 2021-12-09 21:54 GMT
பெங்களூரு:

மந்திரிசபை கூட்டம்

  கர்நாடகத்தில் சில பகுதிகளில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக சில தனியார் பள்ளி-கல்லூரிகளில் வைரஸ் பரவியுள்ளது. இது பெற்றோருக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆதங்கத்திற்கு இடையே பெங்களூருவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது உறுதியானது. இதனால் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இந்த நியைில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்க மந்திரிசபை கூட்டம் 9-ந் தேதி (நேற்று) நடைபெறும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

  அதன்படி, கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசிக்க கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய கட்டுப்பாடுகள்

  கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து நிபுணர் குழுவினர் தங்களது ஆலோசனைகளை கூறியுள்ளனர். மாநிலத்தில் தற்போது உள்ள வைரஸ் பரவல், பயப்படும் அளவுக்கு இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் புதிய கட்டுப்பாடுகள் தேவை இல்லை என்றும், அதே நேரத்தில் சில முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஆலோசனை வழங்கினர். பள்ளி-கல்லூரி விடுதிகளில் பணியாற்றும் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது, சாப்பிடும்போது அனைவரையும் ஒரே நேரத்தில் அனுமதிக்காமல் கூட்டத்தினரை குழு குழுவாக அனுமதிப்பது, தனிமைபடுத்துதல் அறையை ஏற்பாடு செய்து தயார் நிலையில் வைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

  பள்ளி-விடுதிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஏற்கனவே வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளோம். இதில் சில திருத்தங்களை செய்து புதிய வழிகாட்டுதல் வெளியிடப்படும். தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்தும் விதத்தில், சிறப்பு முகாம்கள் நடத்தி அதிகம் பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மந்திரிகள் ஆலோசனை கூறினார். அதை ஏற்று செயல்படுத்தப்படும். மாநிலத்தின் எல்லை மாவட்டங்களில் ஏற்கனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமல்படுத்தப்படும்.

இரவு நேர ஊரடங்கு

  கொரோனா பரவலின் நிலை குறித்து ஆராய்ந்து இரவு நேர ஊரடங்கு உள்பட புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து இன்னும் ஒரு வாரத்திற்கு பிறகு முடிவு செய்யப்படும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தை அனுமதிப்பது குறித்து இன்று (நேற்று) முடிவு எடுக்கவில்லை. இதுபற்றி ஒரு வாரத்திற்கு பிறகு ஆலோசித்து தீர்மானிக்கப்படும். நாங்கள் அவசரகதியில் எந்த முடிவையும் எடுக்க மாட்டோம். சுகாதாரத்துறை மந்திரி சுதாகருக்கு வேறு ஒரு பணி இருப்பதால், அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

  ஆனால் அவர் தொடர்ந்து எங்களுடன் தொடர்பில் தான் உள்ளார். கேரளாவில் இருந்து கர்நாடகம் வரும் மாணவர்கள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும், அத்துடன் 72 மணி நேரத்திற்கு மிகாமல் இருக்கும் வகையில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் போன்ற ஏற்கனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

  கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். அதாவது இரவு நேர ஊரடங்கை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் மந்திரிசபை கூட்டத்தில் புதிதாக எந்த கட்டுப்பாடுகளும் விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்