கர்நாடக மேல்-சபையில் காலியாக உள்ள 25 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு

கர்நாடகத்தில் மேல்-சபையில் காலியாக உள்ள 25 தொகுதிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இதில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் வாக்களிக்கிறார்கள்.

Update: 2021-12-09 21:48 GMT
பெங்களூரு:

வாக்கு சேகரிக்கும் பணி

  75 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக மேல்-சபையில் காலியாகும் 25 இடங்களுக்கு 10-ந் தேதி (அதாவது இன்று) தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலில் 90 வேட்பாளர்கள் போட்டியிட்டு உள்ளனர். இதில் ஒரே ஒருவர் மட்டும் பெண் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா 20 தொகுதிகளிலும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 6 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 3 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சுயேச்சை வேட்பாளர்கள் 30 பேர் களத்தில் உள்ளனர்.

  இந்த தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். ஆளும் பா.ஜனதா சார்பில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, அக்கட்சி மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் மற்றும் முன்னாள் மந்திரிகள் ஆகியோரும், ஜனதா தளம் (எஸ்) சார்பில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, அக்கட்சியின் மாநில தலைவர் எச்.கே.குமாரசாமி ஆகியோரும் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர். கடந்த 7-ந் தேதி பகிரங்க பிரசாரம் ஓய்ந்தது. அதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வாக்கு சேகரிக்கும் பணியை செய்தனர்.

வாக்குச்சாவடிகள்

  இந்த நிலையில் இந்த மேல்-சபை தேர்தலையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது. வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடக்கிறது. இந்த தேர்தலில் 99 ஆயிரத்து 62 வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஆண் வாக்காளர்கள் 47 ஆயிரத்து 205 பேரும், பெண் வாக்காளர்கள் 51 ஆயிரத்து 854 பேரும், பிற வாக்காளர்கள் 3 பேரும் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக 6,072 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

  இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் பணிகளில் 24 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுகிறார்கள். வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடக்கிறது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், புகைப்படத்துடன் கூடிய பிற அடையாள அட்டைகளை காண்பித்து வாக்களிக்கலாம்.

ஓட்டு எண்ணிக்கை

  வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வசதிக்காக சாய்வான தளம் அமைக்கப்பட்டுள்ளது. சக்கர நாற்காலி, குடிநீர், போக்குவரத்து வசதி போன்றவை செய்யப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை 14-ந் தேதி நடக்கிறது. 20 மையங்களில் இந்த ஓட்டு எண்ணிக்கை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தல் முடிவால் எந்த அரசியல் மாற்றமும் ஏற்படப்போவது இல்லை.

  அதே நேரத்தில் இந்த தேர்தல் வெற்றி அரசியல் கட்சிகளுக்கு கவுரவ பிரச்சினையாக உள்ளது. ஆளும் பா.ஜனதாவை பின்னடைவை சந்தித்தால், அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்று எதிர்க்கட்சிகள் தாக்குதலை தொடுக்கும். ஒருவேளை எதிர்க்கட்சிகள் தோல்வி அடையும் பட்சத்தில், பா.ஜனதா ஆட்சி தொடர மக்கள் விரும்புகிறார்கள் என்ற விஷயத்தை பா.ஜனதா முன்வைக்கும்.

மேலும் செய்திகள்