நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது

Update: 2021-12-09 20:29 GMT
திருச்சி
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கு ஆயத்தமாக வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 1 மாநகராட்சி, 3 நகராட்சி மற்றும் 14 பேரூராட்சிகளில் உள்ள வாக்காளர்கள் மற்றும் வார்டுகள், வாக்குச்சாவடிகளின் விவரங்களை நேற்று மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான எஸ்.சிவராசு வெளியிட்டார். மொத்தம் 10 லட்சத்து 11 ஆயிரத்து 323 பேர் இடம் பெற்றுள்ளனர். மேலும் வாக்காளர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மகாலிங்கம் (உள்ளாட்சி தேர்தல்), உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) காளியப்பன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 மாநகராட்சி
அதன்படி, திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் மொத்தம் 7 லட்சத்து 74 ஆயிரத்து 415 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆண் வாக்காளர்கள்-3,75,397. பெண் வாக்காளர்கள்-3,98,900 மற்றும் திருநங்கைகள்-118. வாக்களிப்பதற்காக 859 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாநகராட்சிக்கான வாக்காளர் பட்டியல்கள் மைய அலுவலகம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம், கோ-அபிஷேகபுரம் மற்றும் பொன்மலை ஆகிய கோட்ட அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
நகராட்சி, பேரூராட்சி
துறையூர், துவாக்குடி, மணப்பாறை ஆகிய 3 நகராட்சிகளிலும் 91 ஆயிரத்து 434 வாக்காளர்களும், 116 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. 14 பேரூராட்சிகளில் 10 லட்சத்து 11 ஆயிரத்து 323 வாக்காளர்களும், 230 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்