வடமாநில தொழிலாளியை கொலை செய்த வாலிபர் கைது
வடமாநில தொழிலாளியை கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கீழப்பழுவூர்:
வடமாநில தொழிலாளி
பீகார் மாநிலம், சரண் மாவட்டம், பெகந்தி கிராமத்தை சேர்ந்த யோகேந்திரராயின் மகன் சுரேந்திரகுமார்ராய்(வயது 44). இவர், கடந்த 2 ஆண்டுகளாக அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் எந்திர ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த நிறுவனம் அமைந்துள்ள இடத்தின் பின்புறம் உள்ள வயல்பகுதியில் சுரேந்திரகுமார்ராய் இறந்து கிடப்பதாக கீழப்பழுவூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்ேபரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சுரேந்திரகுமார்ராயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கழுத்தை நெரித்து கொலை
மேலும் இது குறித்து, கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சுரேந்திரகுமார்ராயை, அவருடன் வேலை பார்த்த உத்தரபிரதேச மாநிலம் சோன்பந்த் மாவட்டம், கடுவாரங்கா கிராமத்தை சேர்ந்த பிதம்பர் மகன் சுனில்புய்யா(25) கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து சுனில்புய்யாவை பிடித்து போலீசார் விசாரித்ததில், சுரேந்திரகுமார் ராய் குடிபோதையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட சுனில்புய்யாவை அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர்களுக்கு இடையே திடீரென பிரச்சினை ஏற்பட்டதையடுத்து, சுரேந்திரகுமார்ராயை சுனில்புய்யா சரமாரியாக தாக்கி, பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொலை செய்தது, சுனில்புய்யா அளித்த வாக்குமூலத்தில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து சுனில்புய்யாவை கைது செய்த போலீசார், அவரை நேற்று மாலை அரியலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.