திருவாரூர்-காரைக்குடி இடையே ஜனவரி மாத இறுதியில் பயணிகள் ரெயில் இயக்கப்படும் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் பேட்டி

திருவாரூர்-காரைக்குடி இடையே ஜனவரி மாத இறுதியில் பயணிகள் ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் கூறினார்.

Update: 2021-12-09 19:06 GMT
தஞ்சாவூர்:-

திருவாரூர்-காரைக்குடி இடையே ஜனவரி மாத இறுதியில் பயணிகள் ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் கூறினார்.

தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆய்வு

தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் தஞ்சை ரெயில் நிலையத்தில் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது தஞ்சை ரெயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணிகள் குளிரூட்டப்பட்ட கட்டண அறை, ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஓய்வறை, மின்வாரிய அலுவலகம் ஆகியவற்றை திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் ரெயில் நிலையத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஏற்கனவே நடந்து முடிந்த கட்டமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவரை தஞ்சை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். அந்த மனுவில், பல்வேறு ரெயில்களை தஞ்சை வரை நீடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்று இருந்தன.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவாரூர்-காரைக்குடி பயணிகள் ரெயில்

திருவாரூர்-காரைக்குடி இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகல ரெயில் பாதையில் அடுத்த மாதம்(ஜனவரி) இறுதியில் வழக்கம்போல் பயணிகள் ரெயில் இயக்கப்படும்.(தற்போது இந்த பாதையில் டெமு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது). இந்த ரெயில் பாதையில் தொலைதூர விரைவு ரெயில்கள் இயக்க இப்போதைக்கு வாய்ப்பு இல்லை. இது தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.
தஞ்சை-விழுப்புரம் இடையே இரட்டை அகல ரெயில்பாதை அமைக்க வாய்ப்பு இல்லை. இரட்டை ரெயில் பாதை அமைக்க வேண்டுமென்றால் 70 சதவீதம் சரக்கு ரெயில் போக்குவரத்து இருக்க வேண்டும். ஆனால் அந்த அளவுக்கு சரக்கு ரெயில் போக்குவரத்து இல்லாததால், இந்த திட்டத்துக்கு தற்போது வாய்ப்பில்லை.

படிப்படியாக இயக்கப்படும்

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரெயில்களில் தற்போது சில ரெயில்கள் இயக்கப்படுகிறது. ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பை கருத்தில் கொண்டு மீண்டும் படிப்படியாக இயக்கப்படும். சோழன் விரைவு ரெயில், திருச்செந்தூர் விரைவு ரெயில் பாபநாசம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லாததற்கு வருவாய் அதிகம் இல்லாதது தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மனீஷ் அகர்வால் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்