நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் வெளியீடு
திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 6 லட்சத்து 12 ஆயிரத்து 880 வாக்காளர் உள்ளனர்.
திண்டுக்கல்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக வாக்காளர் பட்டியலை தயாரிக்கும்படி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை கொண்டு, உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் கொடைக்கானல் ஆகிய 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்றது.
வாக்காளர் பட்டியல் வெளியீடு
இதை தொடர்ந்து நேற்று மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாநகராட்சியில் கமிஷனர் சிவசுப்பிரமணியன் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். திண்டுக்கல் மாநகராட்சியை பொறுத்தவரை 88 ஆயிரத்து 112 ஆண்கள், 93 ஆயிரத்து 524 பெண்கள், 34 திருநங்கைகள் என மொத்தம் 1 லட்சத்து 81 ஆயிரத்து 670 பேர் உள்ளனர்.
இதேபோல் பழனி நகராட்சியில் 29 ஆயிரத்து 780 ஆண்கள், 32 ஆயித்து 420 பெண்கள், 14 திருநங்கைகள் என மொத்தம் 62 ஆயிரத்து 214 வாக்காளர்கள் உள்ளனர். ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 13 ஆயிரத்து 641 ஆண்கள், 14 ஆயிரத்து 424 பெண்கள், 3 திருநங்கைகள் என மொத்தம் 28 ஆயிரத்து 68 பேர் உள்ளனர். கொடைக்கானல் நகராட்சியில் 14 ஆயிரத்து 219 ஆண்கள், 15 ஆயிரத்து 162 பெண்கள், 2 திருநங்கைகள் என 29 ஆயிரத்து 383 பேர் உள்ளனர்.
மொத்த வாக்காளர்கள்
மேலும் 23 பேரூராட்சிகளிலும் 1 லட்சத்து 50 ஆயிரத்து 993 ஆண்கள், 1 லட்சத்து 60 ஆயிரத்து 530 பெண்கள், 22 திருநங்கைகள் என 3 லட்சத்து 11 ஆயிரத்து 545 வாக்காளர்கள் உள்ளனர். இதன்மூலம் திண்டுக்கல் மாநகராட்சி, 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகளில் மொத்தம் 6 லட்சத்து 12 ஆயிரத்து 880 வாக்காளர்கள் உள்ளனர்.