ரப்பர் பால்வெட்டும் தொழில் மீண்டும் தொடங்கியது

குமரி மாவட்டத்தில் மழையின் தீவிரம் தணிந்ததையடுத்து குலசேகரத்தில் ரப்பர் பால் வெட்டும் தொழில் மீண்டும் தொடங்கியது.

Update: 2021-12-09 17:37 GMT
குலசேகரம், 
குமரி மாவட்டத்தில் மழையின் தீவிரம் தணிந்ததையடுத்து குலசேகரத்தில் ரப்பர் பால் வெட்டும் தொழில் மீண்டும் தொடங்கியது.
பால் வெட்டும் தொழில்
குமரி மாவட்டத்தில் ஏராளமான ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இவற்றில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பால் வெட்டுதல், பால் சேகரித்தல், ஷீட் அடித்தல் போன்ற வேலை செய்து வருகிறார்கள். மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த கன மழையால் ரப்பர் பால்வெட்டும் தொழில் அடியோடு முடங்கியது. 
இதனால், ரப்பர் விவசாயிகள், தொழிலாளர்கள் போதிய வருமானம் இன்றி கடும் அவதி அடைந்தனர். அத்துடன் வருகிற கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் ேபான்ற பண்டிகையை உற்சாகமாக கொண்டாட முடியுமா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்தது.
மீண்டும் தொடங்கியது
இந்த நிலையில் மாவட்டத்தில் மழையின் தீவிரம் தணிந்து வருகிறது. இதனால், பால்வெட்டுத் தொழில் மீண்டும் பரவலாக தொடங்கியுள்ளது. பொதுவாக டிசம்பர் மாதம் ரப்பர் பால் சீசன் என்பதால் அதிக பால் கிடைத்து வருகிறது. மேலும் ரப்பருக்கு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் நல்ல விலையும் கிடைத்து வருகிறது. இதனால், தொழிலாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதுகுறித்து குலசேகரத்தை சேர்ந்த ரப்பர் பால்வெட்டும் தொழிலாளி செல்வராஜ் கூறியதாவது:- 
தொடர் மழையால் நீண்ட நாட்களாக ரப்பர் பால்வெட்டும் தொழில் முடங்கியது. இதனால், தொழிலாளர்கள் அன்றாட செலவை கூட எதிர்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்போது மழை தணிந்துள்ள நிலையில் பால்வெட்டுத் தொழிலை மீண்டும் உற்சாகமாக தொடங்கியுள்ளோம். தற்போது சீசன் என்பதால் அதிக பால் கிடைக்கிறது, என்றார்.

மேலும் செய்திகள்