விழுப்புரம் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் மோகன் வெளியிட்டார்.
விழுப்புரம்,
தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், நகர்ப்புறத்திற்கான உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது. அதன்படி, இறுதி வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
அதன்படி, விழுப்புரம், திண்டிவனம் ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் அனந்தபுரம், அரகண்டநல்லூர், செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர், வளவனூர், விக்கிரவாண்டி ஆகிய 7 பேரூராட்சிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மோகன் வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பொதுமக்கள் பார்வைக்கு...
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலுக்காக கடந்த நவம்பர் 1-ந்தேதி வெளியான ஒருங்கிணைந்த சட்டமன்ற வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் ஆண் வாக்காளர்கள் 1,30,441 பேரும், பெண் வாக்காளர்கள் 1,39,019 பேரும், மூன்றாம் பாலித்தினர் 53 என மொத்தம் 2,69,513 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் மோகன் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், தி.மு.க. நகர செயலாளர் சக்கரை, அ.தி.மு.க. நகர செயலாளர் வண்டி மேடு ராமதாஸ், துணை செயலாளர் வக்கீல் செந்தில், பா.ஜனதா பொதுச் செயலாளர் சுகுமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சரவணன், தே.மு.தி.க. நகர செயலாளர் மணிகண்டன், பகுஜன் சமாஜ் வாடி கலியமூர்த்தி, காங்கிரஸ் கட்சி ராஜ்குமார், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.