தினத்தந்தி புகார் பெட்டி
நாகை, திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா?
நாகை மாவட்டம் கருவேலங்கடை பகுதி மேலச்செட்டிச்சேரி கிராமத்தில் திருவாசல் குளம் உள்ளது. இந்த குளம் முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் குளம் விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறிவருகிறது. மேலும் கொசுக்களும் அதிகளவில் உற்பத்தியாகிறது. அதுமட்டுமின்றி ஆகாயத்தாமரை செடிகள் அழுகி அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருவாசல் குளத்தில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், மேலசெட்டிச்சேரி.
உயர்மின்விளக்குகள் ஒளிர்ந்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கோமல் கடைவீதியில் அமைக்கப்பட்டிருந்த உயர்மின் விளக்கு சரிவர எரியாமல் இருந்தது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து "தினத்தந்தி" புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கோமல் கடைவீதியில் எரியாமல் இருந்த உயர்மின் விளக்குகள் சரிசெய்யப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
-பொதுமக்கள், குத்தாலம்.
சாலை சீரமைக்கப்படுமா?
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த அகணி பகுதியில் நந்தியநல்லூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அய்யனார்கோவில் தெருவில் உள்ள சாலை பராமரிப்பின்றி கரடு, முரடாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து உள்ளன. இதன் காரணமாக சைக்கிளில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் வருபவர்களும் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள கரடு, முரடான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
-ராஜேஷ், சீர்காழி.
தொற்று நோய் பரவும் அபாயம்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலை அடுத்த பரசலூர் பகுதி கலைஞர்நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கலைஞர் நகர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டி தலைகீழாக கவிழ்ந்து கிடக்கிறது. இதனால் குப்பைத்தொட்டியை சுற்றி குப்பைகள் சிதறிக்கிடக்கிறது. சிதறிக்கிடக்கும் குப்பைகளில் இரைதேடி பன்றிகள் அதிகளவில் அங்கு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், பரசலூர்.