விளாத்திகுளம் அருகே மினிலாரி மோதி சிறுவன் பலி

விளாத்திகுளம் அருகே மினிலாரி மோதிய விபத்தில் காயமடைந்த சிறுவன் இறந்தான். முதலுதவி சிகிச்சை அளிக்க டாக்டர் இல்லாததால் அவன் இறந்ததாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-12-09 15:58 GMT
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேப்பலோடை நடராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மகன் பிரபாகரன் (வயது 4). இவன் நேற்று காலை 8 மணியளவில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரி மோதியதில் அவன் படுகாயம் அடைந்தான். 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் சிறுவனை தூக்கிக்கொண்டு முதலுதவி சிகிச்சைக்காக வேப்பலோடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு டாக்டர் மற்றும் செவிலியர் இருவருமே இல்லை என்று கூறப்படுகிறது. அரை மணி நேரம் வரை காத்திருந்த உறவினர்கள், பின்னர் தனி வாகனம் தயார் செய்து சிறுவனை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் பிரபாகரன் பரிதாபமாக இறந்தான்.

இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் வேப்பலோடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திரண்டு சென்றனர். உரிய நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்க டாக்டர், செவிலியர் பணியில் இல்லாததால் தான் சிறுவன் இறந்ததாகவும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், ஓட்டப்பிடாரம் தாசில்தார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பிறகு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சுமார் 7 மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மினிலாரி மோதியதில் சிறுவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்