மின்கம்பம் மாற்றப்பட்டது
ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட தோவாளை வேல்முருகன் நகர் பகுதியில் உள்ள தெருவின் நடுவே அமைக்கப்பட்ட மின்கம்பம் ஒன்று போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. இதுபற்றி ‘தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின்கம்பத்தை தெருவின் ஓரத்தில் மாற்றி அமைத்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
சுகாதாரமற்ற குடிநீர்
தடிக்காரன்கோணம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு குட்டிபொத்தை, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று காலையில் வினியோகம் செய்யப்பட்ட குடிநீர் கலங்கி கழிவுநீர் போல் வந்தது. இதனால், தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தில், அண்ணாநகர்.
விபத்து அபாயம்
நாகர்கோவில் வடசேரி பஸ்நிலையத்தில் பஸ்கள் உள்ளே செல்லும் நுழைவாயில் பகுதியில் சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி காயமடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜோனி, புதுக்குடியிருப்பு.
சேதமடைந்த மின்கம்பம்
தடிக்காரன்கோணத்தில் இ௫ந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் புதுக்கிராமம் உள்ளது. இந்த பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தின் மேல் பகுதி சேதமடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய கம்பத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வே.மணிகண்டன், தடிக்காரன்கோணம்.
கோவிலை புனரமைக்க வேண்டும்
குளச்சல் உப்பளம் அளத்தம்மன் கோவில் உள்ளது. அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவில் பழமை வாய்ந்ததாகும். தற்போது பெய்த மழைநீர் தேங்கி வடியாமல் நிற்கிறது. மேலும், சுற்றுச்சுவர்களும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீரை வெளியேற்றி புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.கண்ணன், குளச்சல்.
வடியாத மழைநீர்
தேரேகால்புதூர் ஊராட்சிக்குட்பட்ட புரவசேரி, காந்திநகர் பகுதியில் தெருக்களில் வடிகால் ஓடை அமைக்கப்படவில்லை. தற்போது பெய்த மழையால் அப்பகுதியில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் அதன் வழியாகவே செல்லவேண்டி உள்ளது. இதனால், அவர்கள் பெரும் அவதிக்குள்ளாவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையை சீரமைத்து வடிகால் ஓடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜோஸ்மேரி, புரவசேரி.