மாமல்லபுரம் நாட்டிய விழா ஏற்பாடுகள்: சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் ஆய்வு
மாமல்லபுரம் நாட்டிய விழா ஏற்பாடுகள் குறித்து சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் ஆய்வு மேற்கொண்டார்.
நாட்டிய விழா
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களான வெண்ணெய் உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட சிற்பங்களை காண ஆண்டு இறுதியில் அதிக அளவு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர். அப்படி வரும் வெளிநாட்டு பயணிகள் இங்குள்ள ஓட்டல், தங்கும் விடுதிகளில் தங்கி, பல்லவர் கால சிற்பங்களை சுற்றி பார்க்கின்றனர்.
மேலும் அவர்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பாரம்பரிய கலைகளை கண்டு ரசிக்க ஆர்வம் காட்டுவது வழக்ககமாக உள்ளது. மேலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரவும், அவர்களை உற்சாகபடுத்தவும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் மத்திய சுற்றுலாத் துறை போன்ற இரு துறைகளும் இணைந்து, 1992-ம் ஆண்டில் இருந்து டிசம்பர், ஜனவரி மாதங்களில் நாட்டிய விழாவை கோலாகலமாக நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டிய விழா நடத்தப்படவில்லை.
முதன்மை செயலாளர் ஆய்வு
ஆரம்ப கால கட்டத்தில், அர்ச்சுனன் தபசு சிற்பம் முன் நடத்தப்பட்டு வந்தது. பின்னர், 2012-ம் ஆண்டு முதல், கடற்கரை கோவில் நுழைவு வாயில் இடது பகுதியில் உள்ள பசுமையான புல்வெளி பகுதியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த இடம், தற்போது மாவட்ட திட்ட குழுமம் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது, அந்த இடம் பசுமையான புல்வெளி பகுதியாக மேம்படுத்தி தொல்லியல் துறை நிர்வாகம் பராமரித்து வருகிறது. மேலும், நாட்டிய விழா நடத்த சுற்றுலாத்துறை நிர்வாகம் ஆண்டுதோறும் தொல்லியல் துறையிடம் அனுமதி பெற்று நடத்தி வருகிறது. அதே போல், இந்த ஆண்டும் சுற்றுலாத்துறை சார்பில் தொல்லியல் துறையிடம் அனுமதி கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா நடத்த அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில் போன்ற இரு இடங்களில் சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் ஆகியோர் ஆய்வு செய்தனர். அதே போல் சுற்றுலா திட்ட மேம்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தனர். அப்போது திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், தொல்லியல் துறை துணை என்ஜினீயர் ஜீலானி பாஷா, மாமல்லபுரம் தொல்லியல் அலுவலர் சரவணன், காஞ்சீபுரம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, மாமல்லபுரம் கிராம நிர்வாக அதிகாரி நரேஷ்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.
இந்த வார இறுதியில்...
நாட்டிய விழா நடத்துவது குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்திடம் கேட்டபோது, அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில் போன்ற இரு இடங்களில் ஆய்வு செய்துள்ளோம். இரு இடங்களில் எந்த இடத்தில் நடத்தலாம் என சுற்றுலாத்துறையிடம் கலந்தாலோசித்து இந்த வார இறுதியில் தொடங்கும் தேதி மற்றும் நடக்கும் இடம் தெரிவிக்கப்படும் என்றார்.