இரும்பு கம்பியால் மனைவியின் கள்ளக்காதலன் அடித்துக்கொலை

வெள்ளகோவில் அருகே மனைவியின் கள்ளக்காதலனை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது;-

Update: 2021-12-09 12:37 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே சொரியங்கிணற்றுப்பாளையம் மடாமேடு ரோட்டில் நேற்று காலை உடலில் காயங்களுடன் 35 வயது மதிக்கத் தக்க ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு குமரேசன், வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர்  ரமாதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு பிணமாக கிடந்தவரின் உடல் முழுவதும் இரும்பு கம்பியால் தாக்கிய ரத்த காயங்கள் இருந்தன. இதனால் அவரை யாரோ கம்பியால் தாக்கி கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், கொலையானவர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த மழை கோவிந்தன் மகன் சத்திய நாராயணன் வயது 36 என்பதும், இவர் கரூர் மாவட்டம் தென்னிலையில் உள்ள ஒரு கல் குவாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து தனிப்படை போலீசார் தென்னிலை சென்று விசாரித்தனர். விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-

சத்திய நாராயணனுக்கு திருமணமாகி மனைவியும், 11 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளாக மனைவியை விட்டு பிரிந்த சத்திய நாராயணன் தென்னிலையில் உள்ள கல்குவாரியில் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். அந்த கல் குவாரியில் கரூர் மாவட்டம் கோடந்தூர் பகுதியை சேர்ந்த பாண்டியன் (36) என்பவரும் வேலை செய்து வந்துள்ளார். 

அப்போது பாண்டியனின் மனைவிக்கும், சத்திய நாராயணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த விவரம் பாண்டியனுக்கு தெரிய வந்ததும், அவர் தனது மனைவி மற்றும் சத்தியநாராயணனை கண்டித்தார். ஆனாலும் அவர்களுக்கு இடையே கள்ளத்தொடர்பு நீடித்தது.

இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி பாண்டியனின் மனைவியை சத்தியநாராயணன் வெளியூருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் மனைவியை காணாத பாண்டியன் இது குறித்து தென்னிலை போலீசில் புகார் செய்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் தென்னிலையில் ஒரு இடத்தில் சத்திய நாராயணன் நிற்பதை பாண்டியன் பார்த்தார்.

ஆத்திரத்தில் அவரை தீர்த்து கட்ட பாண்டியன் முடிவு செய்தார். இதையடுத்து சத்தியநாராயணனை தனது மோட்டார் சைக்கிளில் பாண்டியன் அழைத்து சென்று மதுவாங்கி கொடுத்துள்ளார். மது போதை தலைக்கு ஏறியதும், இரும்பு கம்பியால் சத்தியநாராயணை கடுமையாக பாண்டியன் தாக்கி உள்ளார். 
இறந்தார்

ரத்த காயங்களுடன் இருந்த சத்திய நாராயணனை அவரது சொந்த ஊருக்கு பஸ் ஏற்றி விடலாம் என்று, அவரை மோட்டார் சைக்கிளில் வைத்து வெள்ளகோவில் பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார். சொரியங்கிணற்றுப்பாளையம்-மடாமேடு ரோட்டில் வந்தபோது, பின்னால் இருந்த சத்திய நாராயணன் மயங்கி கீழே விழுந்தார். இதனால் பயந்துபோன பாண்டியன் அவரை அப்படியே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இந்த நிலையில் நேற்று காலை கீழே விழுந்த இடத்தில் சாலையோரம் சத்திய நாராயணன் பிணமாக கிடந்தார்.
இவ்வாறு விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து பாண்டியன் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மனைவியின் கள்ளக்காதலனை தொழிலாளி அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்