காஞ்சீபுரம் விளக்கொளி பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா
காஞ்சீபுரம் விளக்கொளி பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா வாண வேடிக்கைகளும் நடைபெற்றது.
காஞ்சீபுரத்தில் உள்ள புகழ் பெற்ற விளக்கொளி பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் பெருமாள் அவதரித்த கார்த்திகை மாதம் திருவோண நட்சத்திரத்தில் தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
மழையின்மை காரணமாக கடந்த 2015-ம் ஆண்டுக்கு பிறகு தெப்பத்திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு கோவில் குளத்தில் தண்ணீர் நிரம்பியிருந்ததால் தெப்பத்திருவிழா நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் விளக்கொளி பெருமாள், மரகதவல்லி தாயார், தேசிகன் சாமிகள் ஒன்றாக இணைந்து சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் 7 சுற்று வலம் வந்தனர். வாண வேடிக்கைகளும் நடைபெற்றது.
இதனையடுத்து சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன. விழாவில் கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், குமரகோட்டம் முருகன் கோவில் செயல் அலுவலர் பரந்தாமகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.