அல்லிநகரத்தில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது
அல்லிநகரத்தில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அல்லிநகரம்:
தேனி அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது அல்லிநகரம் பாண்டி கோவில் மலை அடிவாரத்தில் சந்தேகப்படும் வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து துருவித்துருவி விசாரித்தனர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள்.
இதையடுத்து அவர்கள் வைத்திருந்த சாக்குமூட்டையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் விற்பனைக்காக 21 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் போலீசார் விசாரணையில் அவர்கள் பெரியகுளம் கைலாசப்பட்டியை சேர்ந்த பிரபாகரன் (வயது 22), ராம்குமார் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.23 லட்சம் ஆகும்.
பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ைகலாசப்பட்டியை சேர்ந்த கங்காதேவர் என்பவருக்கு தொடர்பு இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்து உள்ளது. அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.