பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்-2 பேர் கைது
பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓமலூர்:
பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புகையிலை பொருட்கள்
ஓமலூர் போலீசார் ஆர்.சி.செட்டிப்பட்டி பிரிவு ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனை நடத்தினர். அந்த லாரியில் மூட்டை, மூட்டையாக கோழி கழிவுகள் இருந்தன. உடனே போலீசார் அந்த மூட்டைகளை அகற்றினர்.
அப்போது அதற்கு கீழே மூட்டை, மூட்டையாக இருந்தன. அந்த மூட்டைகளை பிரித்து பார்த்த போது அதில் புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதாவது ரூ.16 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் 50 மூட்டைகளில் இருந்துள்ளது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2 பேர் கைது
இந்த புகையிலை பொருட்கள் பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. உடனே லாரியை ஓட்டி வந்த தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி புதூர் பழைய செக்போஸ்ட் பகுதியைச் சேர்ந்த ராமு (55), சேலம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவா (27) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் தப்பி ஓடிய நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.