சென்னிமலை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

சென்னிமலை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-08 21:09 GMT
சென்னிமலை
சென்னிமலை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
சென்னிமலை அருகே பாலதொழுவு ஊராட்சிக்கு உள்பட்டது வெங்கமேடு. இங்கு சுமார் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை 7 மணி அளவில் வெங்கமேடு பஸ் நிறுத்தம் அருகே ஒன்று திரண்டனர். பின்னர் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
குடிநீர் வழங்காததை கண்டித்து...
அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘வெங்கமேடு பகுதிக்கு பல நாட்களாக காவிரி ஆற்று குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதுகுறித்து நாங்கள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது கொடுமுடி அருகே குடிநீர் குழாய் உடைந்து விட்டதாகவும், விரைவில் அதனை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்யப்படும்     எனவும் தெரிவித்தனர். ஆனால் 25 நாட்களுக்கு மேல் ஆகியும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் குடிநீரின்றி அவதிப்படுகிறோம். இதை கண்டித்தும், உடனே வெங்கமேடு பகுதிக்கு குடிநீர் வினியோகிக்க கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டோம். குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
அதற்கு அதிகாரிகள், ‘உடனே உங்கள் பகுதியில் காவிரி ஆற்று குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு காலை 9 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்