வேலியே பயிரை மேய்ந்தது: கும்பகோணம் சக்கரபாணி கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய காவலாளிகள் போலீசார் விசாரணை

கும்பகோணம் சக்கரபாணி கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடியது தொடர்பாக காவலாளிகள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வேலியே பயிரை மேய்ந்த கதையாக நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2021-12-08 19:25 GMT
கும்பகோணம்:-

கும்பகோணம் சக்கரபாணி கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடியது தொடர்பாக காவலாளிகள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
வேலியே பயிரை மேய்ந்த கதையாக நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சக்கரபாணி கோவில்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சக்கரபாணி சாமி கோவில் உள்ளது. தமிழகத்தில் உள்ள வைணவ தலங்களில் மிகவும் பிரசித்திபெற்ற கோவிலான இந்த கோவிலுக்கு தினமும் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். கோவிலில் இரவு நேர காவல் பணியில் சக்கரராஜா(வயது 26), பகல் நேர காவல் பணியில் தினகரன்(25) ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

நூதன முறையில் பணம் திருட்டு

இந்த நிலையில் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை அலுவல் பணிக்காக, கோவில் அதிகாரிகள் தற்செயலாக ஆய்வு செய்தனர். 
அப்போது கோவிலில் காவலாளிகளாக உள்ள சக்கரராஜா, தினகரன் ஆகியோர் கடந்த மாதம்(நவம்பர்) 26-ந் தேதி கோவில் சன்னதி மற்றும் கருவறை அருகே உள்ள உண்டியல்களில் ‘சுவிங்கம்’ ஒட்டப்பட்ட கம்பியை விட்டு நூதன முறையில் பணத்தை திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்த காட்சியைக்கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசில் புகார்

இதனைத்தொடர்ந்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் கடந்த மாதம் முழுவதும் இரவு நேரத்தில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்ததில் கடந்த மாதம் 18-ந் தேதி மற்றும் 21-ந் தேதி ஆகிய நாட்களிலும் சக்கரராஜா, தினகரன் ஆகிய இருவரும் கோவில் உண்டியலில் இருந்து இதேபோல் நூதன முறையில் பணத்தை திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. 
கோவில் பாதுகாப்பு பணியில் இருந்த இவர்கள் இருவரும் சேர்ந்து அவ்வப்போது இந்த திருட்டு சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் மல்லிகா, கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

வழக்குப்பதிவு

அதன்பேரில் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் காவலாளிகள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு கோவில் உண்டியலில் இருந்து எவ்வளவு பணம் திருடப்பட்டது? என்பது பற்றி சக்கரராஜா, தினகரன் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
வேலியே பயிரை மேய்ந்த கதையாக கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளிகளே உண்டியலில் இருந்து பணத்தை திருடியது கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்