ஆனைமலையில் ரூ.4½ கோடியில் போலீஸ் குடியிருப்பு கட்டும் பணி மும்முரம்

ஆனைமலையில் ரூ.4½ கோடியில் போலீஸ் குடியிருப்பு கட்டும் பணி மும்முரம்

Update: 2021-12-08 18:47 GMT
பொள்ளாச்சி

ஆனைமலையில் ரூ.4 கோடியே 69 லட்சம் செலவில் போலீஸ் குடியிருப்பு கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கட்டிட பணி மும்முரம்

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றன. இந்த போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீசாருக்கு கடந்த 1965-ம் ஆண்டு 2.10 ஏக்கர் நிலத்தில் போலீஸ் குடியிருப்பு கட்டப்பட்டது. ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 8 போலீசாருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. 

கட்டிடம் கட்டி 45 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த வீடுகளை காலி செய்து வாடகை வீடுகளுக்கு குடியேறினார்கள். இதன் காரணமாக போலீஸ் குடியிருப்பு இருந்த பகுதி புதர்மண்டி கிடந்தது. இதை தொடர்ந்து போலீஸ் குடியிருப்பு கட்டுவதற்கு ரூ.4 கோடியே 69 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து காவலர் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

30 சதவீதம் நிறைவு

ஆனைமலை, ஆழியாறில் போலீஸ் குடியிருப்பு கட்டுவதற்கு நிதி கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. இதில் ஆழியாறில் போலீஸ் நிலையம் கட்டுவதற்கு அனுமதி கிடைத்தது. இதற்கிடையில் அந்த நிதியை கொண்டு ஆனைமலையில் போலீஸ் குடியிருப்பு கட்டுவதற்கு உயர் அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்தனர். இதை தொடர்ந்து அனுமதி பெறப்பட்டு ஆனைமலையில் போலீஸ் குடியிருப்பு கட்டப்படுகிறது. 

அங்கு உள்ள பழைய கட்டிடங்களை இடித்து விட்டு, 2 சப்&இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 28 போலீசாருக்கு வீடுகள் கட்டப்படுகிறது. தற்போது கட்டிட பணிகள் 30 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. ஒப்பகாலத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கிடையில் மீண்டும் நிதி ஒதுக்கீடு செய்ததும் ஆழியாறில் போலீஸ் குடியிருப்பு கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்