கடலூர் முதுநகர் அருகே ஓடும் பஸ்சில் டிரைவர் திடீர் சாவு 50 பயணிகள் உயிர் தப்பினர்
கடலூர் முதுநகர் அருகே ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதில் அதிர்ஷ்டவசமாக 50 பயணிகள் உயிர் தப்பினார்கள்.
கடலூர் முதுநகர்,
விருத்தாசலத்தில் இருந்து நேற்று காலை 11.30 மணியளவில் ஒரு தனியார் பஸ் கடலூர் நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பஸ்சை விருத்தாசலத்தை சேர்ந்த செந்தில்நாதன் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
இந்தநிலையில் கடலூர் முதுநகர் அருகே பெரிய பிள்ளையார் மேடு என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது, செந்தில்நாதனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தடுப்பு கட்டை மீது மோதியது
இதில் அவர் சாதுர்யமாக செயல்பட்டு பஸ்சை நிறுத்த முற்பட்டார். ஆனால் அதற்குள் அவர் மயங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பஸ் சாலையின் வலதுபுறம் உள்ள தடுப்பு கட்டைகள் மீது மோதி, அருகில் இருந்த இரண்டு மின் கம்பங்கள் மீது மோதியபடி நின்றது.
அப்போது அந்த பகுதியில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதனால், பஸ்சில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் எவ்வித காயமின்றி தப்பினார்.
சாவு
இதற்கிடையே செந்தில்நாதனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் கடலூர் முதுநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.