விழுப்புரத்தில் துணை தாசில்தார் வீட்டில் ரூ.3 லட்சம் நகை-பணம் கொள்ளை

விழுப்புரத்தில் துணை தாசில்தார் வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-12-08 16:18 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஹைவேஸ் நகரில் வசித்து வருபவர் குபேந்திரன் (வயது 45). இவர் மேல்மலையனூர் தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்காக மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை குபேந்திரன் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் மாலையில் அங்குள்ள ஒரு கோவிலில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு குபேந்திரன் புறப்பட்டார். செல்லும் வழியில் விழுப்புரத்தில் தனது மனைவி மற்றும் மகளை காரில் இருந்து இறங்கி வீட்டிற்கு செல்லும்படி கூறிவிட்டு கோவிலுக்கு புறப்பட்டுச்சென்றார்.

நகை-பணம் கொள்ளை

அதன் பிறகு குபேந்திரனின் மனைவியும், மகளும் தங்கள் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 8¾ பவுன் நகைகள் மற்றும் ரூ.6 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த தகவலின்              பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார், அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளை போன நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சமாகும்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு நகை- பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்