20 தபால் நிலையங்களில் ஆதார் சிறப்பு முகாம்; தேனி கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
தேனி தபால் கோட்டத்தில் 20 தபால் நிலையங்களில் ஆதார் சிறப்பு முகாம்கள் நடப்பதாக கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் தெரிவித்தார்.
தேனி:
தேனி தபால் கோட்டத்தில் 20 தபால் நிலையங்களில் ஆதார் சிறப்பு முகாம்கள் நடப்பதாக கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் தெரிவித்தார்.
ஆதார் சிறப்பு முகாம்
தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய தபால் துறை மக்களின் தேவையை அறிந்து அதை பூர்த்தி செய்யும் விதமாக ஏராளமான தபால் நிலையங்களில் ஆதார் சேவை மையங்களை நடத்தி வருகிறது.
அதன்படி தேனி தபால் கோட்டத்தில் தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கண்டமனூர், வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கோம்பை, தேவாரம், ராயப்பன்பட்டி, கம்பம், தேவதானப்பட்டி, கடமலைக்குண்டு, காமயகவுண்டன்பட்டி, சேடப்பட்டி, சாப்டூர், எழுமலை, உசிலம்பட்டி, போடி, வடுகபட்டி ஆகிய 20 தபால் நிலையங்களில் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த ஆதார் சேவை மையங்களில் ஆதார் சிறப்பு முகாம்கள் நேற்று தொடங்கியது. இந்த முகாம் வருகிற 31-ந்தேதி வரை நடக்கிறது.
குழந்தைகளுக்கு இலவசம்
ஆதார் அட்டையை புதுப்பித்தல், புதிதாக ஆதார் பதிவு செய்தல், திருத்தம் செய்தல் ஆகிய பணிகள் இந்த சிறப்பு முகாம்களில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சிறப்பு முகாம்களில் புதிதாக ஆதார் எடுக்கவும், குழந்தைகளுக்கு கைரேகைகள் மற்றும் கருவிழி பதிவுகளை புதுப்பிக்கவும் கட்டணமின்றி முற்றிலும் இலவசம். ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி, செல்போன் எண், பாலினம் ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். புகைப்படம் மற்றும் கைரேகை புதுப்பிக்க ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.
எனவே தேனி தபால் கோட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு ஆதார் சேவை மையங்கள் அமைந்துள்ள தபால் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.