2 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்த உத்தரவு ரத்து
2 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மதுரை,
மதுரை காளவாசல் பகுதியைச்சேர்ந்த இளவரசி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எனது கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த ஆண்டு அவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உமாசங்கர், சாய்பிரசாத் ஆகியோர் ஏற்கனவே கொலை உள்ளிட்ட வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்துள்ளனர். அவர்கள் முன்கூட்டியே விடுதலையாகி, எனது கணவரை கொலை செய்துள்ளனர்.
மேலும் சில கொலை, கொலை முயற்சியில் ஈடுபட்டதாக மதுரை, தேனி மாவட்ட போலீஸ் நிலையங்களில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இவர்கள் வெளியில் இருந்தால் மேலும் பல கொலை சம்பவங்களை அரங்கேற்றுவார்கள். எனவே அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்யவும், எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, உமாசங்கர், சாய்பிரசாத் ஆகியோரை முன்கூட்டியே விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்து, அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்சரித்தது.
இதையடுத்து அதிகாரிகள் ஆஜராகி, உமாசங்கர் ஏற்கனவே கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சாய ்பிரசாத்தை விரைவில் கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வருகிறார் என தெரிவித்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்பு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, உமாசங்கர், சாய்பிரசாத் ஆகியோரை முன்கூட்டியே விடுதலை செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. இவர்களைப்போல முன்கூட்டியே விடுதலையானவர்கள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் உடனடியாக அந்த உத்தரவு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார். இதுசம்பந்தமான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சாய்பிரசாத்தை விரைவில் கைது செய்து சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.