ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வலியுறுத்தி கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வலியுறுத்தி கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்:
ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வலியுறுத்தி கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கைத்தறி பட்டு
ஜவுளி ரகங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதை ரத்து செய்ய வலியுறுத்தி சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு சங்க தலைவர் பலராமன் தலைமை தாங்கினார். செயலாளர் மாதப்பன் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.
இது குறித்து சங்க தலைவர் பலராமன் கூறியதாவது:-
கொண்டலாம்பட்டி, மேச்சேரி, நங்கவள்ளி, இளம்பிள்ளை, சிந்தாமணியூர், ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தி செய்து வருகின்றனர். ஜவுளி உற்பத்தி பொருட்களுக்கு இதுவரை 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது.
வாக்குவாதம்
அடுத்த மாதம் (ஜனவரி) முதல் ஜவுளி ரகங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஜவுளி உற்பத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே ஜவுளி உற்பத்திக்கு உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கோரிக்கை மனுவை கலெக்டரிடம் வழங்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி 4 பேரை மட்டும் அனுமதித்தனர்.
இதனால் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.