வாழப்பாடி அருகே துணிகரம்: வீட்டை சுத்தம் செய்து தருவதாக மூதாட்டியை ஏமாற்றி நகை, பணம் திருட்டு-2 ஆண் நண்பர்களுடன் பெண் கைது

வாழப்பாடி அருகே வீட்டை சுத்தம் செய்து தருவதாக மூதாட்டியை ஏமாற்றி நகை, பணம் திருட்டு தொடர்பாக 2 ஆண் நண்பர்களுடன் பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-12-07 23:11 GMT
வாழப்பாடி:
வாழப்பாடி அருகே வீட்டை சுத்தம் செய்து தருவதாக மூதாட்டியை ஏமாற்றி நகை, பணம் திருட்டு தொடர்பாக 2 ஆண் நண்பர்களுடன் பெண் கைது செய்யப்பட்டார்.
இந்த துணிகர திருட்டு குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வயதான தம்பதி
வாழப்பாடி அருகே பழனியாபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி (வயது 85). இவருடைய மனைவி வீரம்மாள் (75). வயதான இந்த தம்பதி தனியாக வசித்து வந்தனர். சம்பவத்தன்று வீரம்மாள் காய்கறி வாங்க கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.
அப்போது பெரியசாமி தன்னுடைய மனைவியிடம் வீட்டை சுத்தம் செய்வதாக கூறி ஒரு பெண் வீட்டுக்கு வந்து விட்டு சென்றதாக கூறியுள்ளார். உடனே வீரம்மாள் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.65 ஆயிரம், மோதிரம், கம்மல், தங்க நாணயங்கள் உள்ளிட்டவை திருட்டு போய் இருந்தது.
திருட்டு கும்பல்
இதுகுறித்து வீரம்மாள் வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்்
அப்போது, வீட்டை நோட்டமிட்டு, அங்கிருப்பவர்களை ஏமாற்றி திருடும் கும்பல் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
3 பேர் கைது
கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய போது அந்த பெண், சேலம் காந்திநகர் பெரியகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த மைதிலி (39) என்பது தெரியவந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில் சேலம் கோரிமேடு ஐயந்திருமாளிகை பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (23), கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பெரியதல்லப்பாடி பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் பாரதிராஜா (29) ஆகிய தன்னுடைய ஆண் நண்பர்களுடன் சேர்ந்து திருடியது  தெரிய வந்தது. உடனே போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். கைதான மைதினி மீது ஏராளமான திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்