மின்வேலியில் சிக்கி காட்டுயானை செத்தது
தரிகெரே அருகே சட்டவிரோதமாக அமைத்த மின்வேலியில் சிக்கி காட்டுயானை செத்தது. இதுதொடர்பாக தோட்ட உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
சிக்கமகளூரு:
இரைதேடி வந்த காட்டுயானை
சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா லிங்கதஹள்ளி அருகே மல்லிகேனஹள்ளி எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமம் பத்ரா வனப்பகுதியை ஒட்டி இருக்கிறது. இதனால் வனப்பகுதியில் இருந்து மல்லிகேனஹள்ளி மற்றும் அதன்சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விளைநிலங்களுக்கு காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் இரைதேடி வருவது வழக்கமாக உள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள், வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க தங்களது தோட்டத்தை சுற்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மல்லிகேனஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஒருவரது சோளத்தட்டை விளைநிலம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க அவர், தனது விளைநிலத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார்.
நேற்றுமுன்தினம் மாலை வனப்பகுதியில் இருந்து விளைநிலத்திற்கு காட்டுயானை ஒன்று இரைதேடி வந்துள்ளது.
மின்சாரம் தாக்கி செத்தது
அப்போது காட்டுயானை, சோளத்தட்டைகளை தின்பதற்காக மின்வேலியை மிதித்து செல்ல முயன்றது. இந்த சந்தர்ப்பத்தில் காட்டுயானை மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த காட்டுயானை சம்பவ இடத்திலேயே செத்து மடிந்தது. இதனை சிறிது நேரம் கழித்து பார்த்த அப்பகுதியினர், தரிகெரே வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் கால்நடை டாக்டரை வரவழைத்து செத்து போன யானைக்கு உடற்கூறு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் வனத்துறையினருக்கு மின்வேலியில் சிக்கியதால் மின்சாரம் தாக்கி காட்டுயானை செத்தது தெரியவந்தது. மேலும் தோட்ட உரிமையாளர் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தது தெரியவந்தது. இதையடுத்து உடற்கூறு பரிசோதனைக்கு பிறகு செத்த காட்டுயானையின் உடல் அங்கேயே குழித்தோண்டி புதைக்கப்பட்டது.
வலைவீச்சு
இதற்கிடையே சம்பவம் அறிந்து தோட்ட உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து லிங்கதஹள்ளி போலீசில், வனத்துறையினர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தோட்ட உரிமையாளரை வலைவீசி தேடிவருகின்றனர்.
இதேப்பகுதியில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு மின்வேலியில் சிக்கி ஒரு காட்டுயானை செத்தது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் கடந்த ஓராண்டில் மின்சாரம் தாக்கி 4 காட்டுயானைகள் செத்துள்ளதாகவும், அதனால் சட்டவிரோதமாக மின்வேலி அமைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையினருக்கு, வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.