வருகிற 20-ந் தேதி முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

வருகிற 20-ந் தேதி முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நடைமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2021-12-07 19:52 GMT
தென்காசி:
வருகிற 20-ந் தேதி முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நடைமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றாலம் சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குளித்து மகிழ தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநில சுற்றுலா பயணிகளும் வந்து செல்வார்கள். கொரோனா 2-வது அலை காரணமாக கடந்த 16.4.2021 முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. எனவே, அருவிகளில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில் குற்றாலம் அருவிகளில் வருகிற 20-ந்தேதி முதல் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

8 மாதங்களுக்கு பிறகு....

இதுதொடர்பாக தென்காசி  மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் வருகிற 20-ந்தேதி திறக்கப்பட உள்ளது. 20-ந்தேதி முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் கோவிட்-19 தொற்று தொடர்பான அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பொதுமக்கள் சமூக இடைவெளியினை கடைபிடித்து உள்ளாட்சி நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குற்றாலம் அருவிகளில் சுமார் 8 மாதங்களுக்கு பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

குழுக்கள் அமைப்பு

அருவிகள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்படுவதை தொடர்ந்து, அருவிகளின் பராமரிப்பு மற்றும் நிலையான இயக்க நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்து அறிக்கை அளிக்க தென்காசியில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் இதர குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளன.

மாவட்ட அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள் அடங்கிய குழு மற்றும் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சுற்றுச்சூழல் பூங்கா, பழைய குற்றாலம் அருவி, மேக்கரை (அச்சன்புதூர்) அருவிகள், கண்ணுபுளிமெட்டு அருவிகள் ஆகியவற்றுக்கு தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த குழுவில் அதிகாரிகள், அலுவலர்கள், போலீசார், வனத்துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்று உள்ளனர்.

நடைமுறைகள்

தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் மற்றும் தனியார் பயன்படுத்தும் அருவிகளில் கீழ்கண்ட நிலையான இயக்க வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றிட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
 * குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் இடைவெளியில் சுற்றுலா பயணிகள் நிறுத்தப்பட வேண்டும். இடைவெளியுடன் நிற்பதற்கு தேவையான இடங்களில் குறியீடு செய்யப்பட வேண்டும்.
 * காய்ச்சல் கண்டறியும் கருவியை (தெர்மல் ஸ்கேனர்) கொண்டு பொதுமக்களுக்கும், பணியாளர்களுக்கும் தவறாது காய்ச்சலுக்கான சோதனை நடத்தப்பட வேண்டும்.

 * தனி மனித இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். 
 * நோய் கட்டுப்பாட்டு பகுதியில் (கன்டெய்மெண்ட் ஜோன்) இருந்து சுற்றுலா பயணிகள் அருவிகளுக்கு வருகை தருவதை தவிர்க்க வேண்டும்.
 * தொற்று சந்தேகம் உள்ள சுற்றுலா பயணிகளை தற்காலிகமாக தனிமைப்படுத்த வசதிகள் செய்யப்பட வேண்டும்.
 * சி.சி.டி.வி. கேமரா மூலம் பயணிகள் வருகை கண்காணிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு

இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது. அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்