மயங்கி விழுந்து கர்ப்பிணி திடீர் சாவு; இரட்டை ஆண் சிசுக்களும் உயிரிழந்தன

மயங்கி விழுந்து கர்ப்பிணி திடீரென உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த இரட்டை ஆண் சிசுக்களும் உயிரிழந்தன. இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2021-12-07 19:33 GMT
அருப்புக்கோட்டை, 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள வதுவார்பட்டியை சேர்ந்தவர் சங்கன். கட்டிட தொழிலாளி.  இவருடைய மனைவி அனந்தாயி (வயது 23). இவர்களுக்கு 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது.  இந்த நிலையில் 2-வது முறையாக அனந்தாயி கர்ப்பம் அடைந்தார். தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். 

நேற்று முன்தினம் அனந்தாயி திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உயிருக்கு போராடிய அவரை உடனடியாக உறவினர்கள் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.   அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். 

அனந்தாயி உடலை பார்த்து குடும்பத்தினர் கதறினர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

பிரேத பரிசோதனையின் போது, அவர் இரட்டை சிசுவை வயிற்றில் சுமந்ததும், அவை இரண்டுமே 2 ஆண் சிசுக்கள் என்பதும் தெரியவந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால், தாய் இறந்ததால் சிசுக்களையும் காப்பாற்ற இயலவில்லை எனவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அனந்தாயி தந்தை சீனி (50) அளித்த புகாரின் பேரில் பந்தல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திடீெரன உடல் நலம் பாதிக்கப்பட்டு அனந்தாயி உயிரிழந்தாரா? ஒவ்வாத உணவு ஏதேனும் சாப்பிட்டதால் அவர் உயிரிழக்க நேர்ந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
அதேபோல மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் முகமது காசிம் தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் அனந்தாயி குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அனந்தாயிக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. கல்யாணகுமாரிடம் மேல் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்