காய்கறி வியாபாரி வீட்டில் 10 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் கொள்ளை

காய்கறி வியாபாரி வீட்டில் 10 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் கொள்ளை

Update: 2021-12-07 19:02 GMT
திருச்சி, டிச.8-
ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்.சாஸ்திரிரோடு பகுதியை சேர்ந்தவர் நீலமேகம் (வயது 50). இவர் காய்கறி மற்றும் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம்இரவு நீலமேகம் வீட்டின் ஒரு அறையில் குடும்பத்துடன் படுத்து தூங்கி கொண்டு இருந்தார். அப்போது அவரது வீட்டில் பழைய இரும்புகள் போட்டு வைத்திருந்த அறையின் கதவை திறந்து மர்மநபர் உள்ளே புகுந்தார். வீட்டின் பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றார்.நேற்று காலை நீலமேகத்தின் மகன் சதீஷ் மற்றொரு அறைக்கு வந்த பார்த்தபோது, அங்கு பீரோ உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தனது தந்தை நீலமேகத்துக்கு இது பற்றி தெரிவித்தார். அவரும் வந்து பார்த்துவிட்டு ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விரல்ரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்னும் ஓரிரு தினங்களில் நீலமேகத்தின் உறவினர் வீட்டு திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக ரூ.50 ஆயிரத்தை கடன் வாங்கி வைத்து இருந்ததாகவும், அதை கொள்ளையடித்து சென்று விட்டதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்