ஆம்பூர் அருகே ரூ.25 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்; 6 பேர் கைது

ஆம்பூர் அருகே போலீசார் சினிமா பாணியில் காரை துரத்தி சென்று மடக்கி ரூ.25 லட்சம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பேரை கைது செய்துள்ளனர்.

Update: 2021-12-07 18:36 GMT
ஆம்பூர்

ஆம்பூர் அருகே போலீசார் சினிமா பாணியில் காரை துரத்தி சென்று மடக்கி ரூ.25 லட்சம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பேரை கைது செய்துள்ளனர்.

போலீஸ் சீருடையில் வழிப்பறி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வெங்கிளி பகுதியில் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டுப் புடவை வியாபாரி கனகராஜ் என்பவரின் காரை வழிமறித்த போலீஸ் சீருடை அணிந்த கும்பல் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றது. இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசில் கனகராஜ் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகார் மற்றும் தப்பி சென்ற காரின் எண்ணை வைத்து, ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வழிப்பறி நடைபெற்றதாக கூறப்படும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த போது வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்பட்ட சொகுசு கார் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

ரூ.25 லட்சம் கள்ள நோட்டு

உடனடியாக சொகுசு காரை துரத்தி பிடிக்க முயன்றபோது காரில் இருந்த மர்ம நபர்கள் காரை வேகமாக ஓட்டிச்சென்றனர். ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. உடனடியாக காரில் இருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்து சோதனை நடத்தினர்.

 இந்த சோதனையில் காரில் இருந்த இரண்டு பைகளில் சுமார் ரூ.25 லட்சம் கள்ளநோட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
அதை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த ஆரணி பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 40), வேலூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (35), சதீஷ்குமார் (30) ஆகிய மூன்று பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், அவர்கள் 3 பேரும் போலீஸ் போல் நடித்து கள்ளநோட்டுகளை மாற்றுவது, வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. 

2 கார்கள் பறிமுதல்

அவர்களை கைது செய்த போலீசார், இதுதொடர்பாக பொய்கை பகுதியை சேர்ந்த டேனியல் (21), சுரேஷ் (21) மற்றும் சின்ன தோட்டாளம் பகுதியை சேர்ந்த சரத் (25) உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்கள் பயன்படுத்திய 2 கார், 9 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 
மேலும் நேற்று முன்தினம் வழிப்பறி நடைபெற்றதாக புகார் அளித்த கனகராஜ், குணசேகரன் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் துரத்தி செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்