கம்பைநல்லூர் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டு போலீசார் விசாரணை

கம்பைநல்லூர் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டு போலீசார் விசாரணை

Update: 2021-12-07 18:34 GMT
மொரப்பூர்:
கம்பைநல்லூர் அருகே உள்ள அண்ணாமலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 51). இவர் கிருஷ்ணகிரியில் குடும்பத்துடன் தங்கி துணி வியாபாரம் செய்து வருகிறார். இதே கிராமத்தை சேர்ந்த சென்னையன் (45) மற்றும் மதுபாலாஜி (40) ஆகியோரும் குடும்பத்துடன் சென்னையில் தங்கி துணி வியாபாரம் செய்து வருகிறார்கள். 
இவர்கள் 3 பேருக்கும் அண்ணாமலைப்பட்டியில் சொந்தவீடுகள் உள்ளன. 3 குடும்பங்களும் வெளியூரில் தங்கி துணி வியாபாரம் செய்து வருவதால் அண்ணாமலைப்பட்டியில் உள்ள வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் சென்னையனின் தாய் ஊருக்கு சென்றவர் நேற்று காலை அண்ணாமலைப்பட்டியில் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து  சென்னையனுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் வெங்கடேசன் மற்றும் மதுபாலாஜி ஆகியோரின் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்து கம்பைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டு போன 3 வீடுகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில் வெங்கடேசன் என்பவர் வீட்டில் இருந்த 1.5 கிலோ வெள்ளி மற்றும் 3 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 3 பட்டு புடவைகள், துணிமணிகள் திருட்டு போனதாக கூறினார். மேலும் சென்னையன் மற்றும் மது பாலாஜி ஆகியோர் சென்னையிலிருந்து வந்து பார்த்த பின்பு தான் வீட்டில் என்ன என்ன பொருட்கள் திருடு போயுள்ளது என்பது குறித்து புகார் தெரிவித்த பின்னரே திருடு போன பொருட்கள் குறித்து விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்