பள்ளிபாளையத்தில் தொலைந்த 3 வயது குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு-பாசப்போராட்டத்தால் போலீஸ் நிலையத்தில் நெகிழ்ச்சி

பள்ளிபாளையத்தில் தொலைந்த 3 வயது குழந்தை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட பாசப்போராட்டம் போலீஸ் நிலையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Update: 2021-12-07 18:33 GMT
பள்ளிபாளையம்:
3 வயது குழந்தை
ஈரோடு மாநகராட்சி மரப்பாலம் பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா. இவருடைய மனைவி தீபா. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 4-ந் தேதி முஸ்தபா-தீபா தம்பதியினர் தங்களது 3 வயது குழந்தையான பாலமுருகனுடன் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வந்தனர். அவர்கள் அங்குள்ள சனி சந்தையில் பொருட்கள் வாங்கினர். அப்போது குழந்தை பாலமுருகன் அங்கு விளையாடி கொண்டிருந்தான்.
தம்பதியினர் பொருட்கள் வாங்கி விட்டு பார்த்தபோது, விளையாடி கொண்டிருந்த குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சந்தையில் தேடி பார்த்தனர். மேலும் அங்கிருந்தவர்களிடமும் குழந்தை குறித்து கேட்டனர். ஆனால் பெற்றோரால் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தங்களது வீட்டுக்கு சோகத்துடன் திரும்பினர்.
மீட்பு
இந்தநிலையில் குழந்தை பாலமுருகன் சந்தையின் வாசல் அருகே அழுது கொண்டிருந்தான். அவன் நீண்ட நேரமாக அழுது கொண்டிருந்ததை அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான விஷ்ணு என்பவர் கவனித்தார். அவர் இதுகுறித்து பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அவர் குழந்தையை தூக்கி கொண்டு தனது வீட்டுக்கு சென்றார். 
அங்கு குழந்தை பாலமுருகன், விஷ்ணுவின் குடும்பத்தினருடனும், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுடனும் அன்பாக பழகினான். அவர்களும் குழந்தைக்கு பிஸ்கட், சாக்லேட் ஆகியவற்றை வாங்கி கொடுத்தனர்.
தாய் ஆனந்த கண்ணீர்
இதனிடையே பள்ளிபாளையம் போலீசார் குழந்தையின் போட்டோவை வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். மேலும், குழந்தையின் பெற்றோர் குறித்து தெரிந்தால் உடனடியாக போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கும்படி கூறினர். இதனை அறிந்த முஸ்தபா-தீபா தம்பதியினர் நேற்று பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் தொலைந்து போன தங்களது குழந்தையின் அங்க அடையாளங்களை கூறினர். இதையடுத்து போலீசார் சனிசந்தையில் மீட்கப்பட்ட குழந்தை, முஸ்தபா-தீபா தம்பதியினருடையது என்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து குழந்தை பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தீபா தனது குழந்தையை ஆரத்தழுவி முத்தமிட்டார். மேலும் அவர் குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
பாசப்போராட்டம்
அப்போது 3 நாட்களாக குழந்தையை அன்புடன் பராமரித்து வந்த விஷ்ணுவின் குடும்பத்தினர் மற்றும் சனி சந்தை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குழந்தையை பிரிய மனமின்றி அழுதனர். அவர்கள் ஒவ்வொருவரும் குழந்தையை முத்தமிட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் குழந்தைக்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுத்தனர். 
போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த பாசப்போராட்டம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்