அரசு பஸ் கண்டக்டர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்

குளச்சலில் மீன் நாற்றம் வீசுவதாக கூறி பெண்ணை பஸ்சில் இருந்து இறக்கி விட்டதை தொடர்ந்து அரசு பஸ் கண்டக்டர் உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து அரசு போக்குவரத்து கழக அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Update: 2021-12-07 17:54 GMT
குளச்சல்:
குளச்சலில் மீன் நாற்றம் வீசுவதாக கூறி பெண்ணை பஸ்சில் இருந்து இறக்கி விட்டதை தொடர்ந்து அரசு பஸ் கண்டக்டர்  உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து அரசு போக்குவரத்து கழக அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
 மீன்நாற்றம் என்று கூறி...
குளச்சல் அருகே உள்ள வாணியக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் மேரி (வயது 65). இவர் தினமும் காலையில் மீன் வாங்கி குளச்சல் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு தலையில் சுமந்து சென்று விற்பனை செய்வார். மீனை விற்று முடித்ததும், இரவு குளச்சல் பஸ் நிலையத்துக்கு வந்து மகளிருக்கான அரசு இலவச பஸ்சில் ஏறி ஊருக்கு செல்வது வழக்கம்.
அதே போல் நேற்று முன்தினம் மீன் வியாபாரத்தை முடித்துக்கொண்டு ஊருக்கு செல்வதற்காக குளச்சல் பஸ் நிலையத்துக்கு செல்வம் மேரி வந்தார். வாணியக்குடி செல்லும் அரசு பஸ் வந்ததும் அதில் செல்வம் மேரி ஏறியுள்ளார். அவரை பார்த்ததும், பஸ் கண்டக்டர், மீன் நாற்றம் வீசுவதால் பஸ்சில் பயணம் செய்ய முடியாது எனக்கூறி இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.
ஆவேசமடைந்த பெண்
இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம் மேரி பஸ் நிலைய நேர கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு சென்று, பஸ்சில் ஏறிய பெண்ணை எப்படி இறக்கி விடலாம். இது என்ன நியாயம்? இதுபற்றி நான் புகார் செய்வேன் என்று ஆவேசமாக கூறினார்.
மேலும் தனது ஆதங்கத்தை அங்கு நின்ற பொதுமக்களிடமும் கொட்டி தீர்த்தார். அதேநேரம் செல்வம் மேரியை இறங்கி விட்ட கண்டக்டர் எதையும் அறியாதவர் போல் நேரக்கட்டுப்பாட்டு அலுவலகம் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது செல்வம் மேரி அங்கு நின்றவர்களிடம், நான் வாணியக்குடி வரை நடந்தா செல்ல வேண்டும்? என்று கண்கலங்கிய படி கூறிவிட்டு பஸ் நிலைய சுற்று சுவரில் சாய்ந்தபடி நின்றார்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது பஸ்சில் நடக்கும் நவீன தீண்டாமையா? என கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள், அந்த கண்டக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
பணியிடை நீக்கம்
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பஸ் கண்டக்டர் மணிகண்டன், டிரைவர் மைக்கேல் மற்றும் நடந்த சம்பவத்தை அதிகாரிகளுக்கு தெரிவிக்காததால், அப்போது பஸ் நிலையத்தில் நேர காப்பாளராக இருந்த ஜெயக்குமார் ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் அரவிந்த் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

மேலும் செய்திகள்