‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-12-07 14:57 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு உடனடி தீர்வு
தென்காசி மாவட்டம் கடையத்தை சேர்ந்தவர் கே.திருக்குமரன். இவர், தென்காசியில் இருந்து சம்பன்குளத்துக்கு (வழித்தடம் எண்- 30) இயக்கப்படும் அரசு பஸ்சில் மேற்கூரை பழுதடைந்து மழைநீர் உள்ளே ஒழுகுவதாக அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி‘ புகார் பெட்டியில் செய்தியாக பிரசுரமானது. அதற்கு உடனடி தீர்வாக மாற்று பஸ் இயக்கப்பட்டு வருகிறது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் அவர் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

ஆபத்தான மின்கம்பம்
நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா இடையன்குடியில் இருந்து குட்டம் செல்லும் வழியில் கடகுளம் கிராமத்துக்கு முன்பு அமைந்துள்ள மின்கம்பமானது, காங்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. எனவே, ஏதேனும் விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பாக ஆபத்தான அந்த மின்கம்பத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜஸ்டஸ், இடையன்குடி.

படித்துறை சீரமைக்கப்படுமா?
வீரவநல்லூர் பழைய பாரதியார் பள்ளி அருகே அமைந்துள்ள வாய்க்கால் படித்துறை மீது கடந்த சில மாதத்திற்கு முன்பு பெய்த கனமழையால் பெரிய மரம் விழுந்து சேதம் அடைந்தது. அங்கு விழுந்த மரத்தை பேரூராட்சி நிர்வாகம் அகற்றியது. ஆனால், இதுவரை படித்துறை சீரமைக்கப்படவில்லை. இதனால் படித்துறையை மக்கள் பயன்படுத்த முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, படித்துறையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
எஸ்.வேலு, வீரவநல்லூர்.

பொது நூலகம் அவசியம்
நாங்குநேரி தாலுகா மூலைக்கரைப்பட்டி நகரப்பஞ்சாயத்துக்கு உட்பட்ட 11-வது வார்டு கடம்பன்குளம் கிராமத்தில் தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. மேலும், இங்கு சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். எனவே, மாணவ-மாணவிகள் தங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும், அரசு தேர்வு எழுதுவதற்கும் பொது நூலகம் ஒன்று அவசியம் தேவைப்படுகிறது. எனவே, பொது நூலகம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
பி.மணிகண்டன், கடம்பன்குளம்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்
பாளையங்கோட்டை உழவர் சந்தையின் உள்ளே காய்கறி கழிவுகள் மற்றும் குப்பைகள் சரிவர அள்ளப்படாமல் குவிந்து கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவது மட்டுமன்றி நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, குப்பைககளை அப்புறப்படுத்துவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அபினேஷ், கே.டி.சி.நகர்.

வேகத்தடை வேண்டும்
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா ஊத்துமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட மறவர் காலனியில் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் வேகமாக செல்கிறது. எனவே, ஏதேனும் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனோஜ்குமார், மறவர் காலனி.

பஸ்நிலையத்தின் உள்ளே சுற்றித்திரியும் மாடுகள்
திருச்செந்தூர் பகத்சிங் பஸ்நிலையத்தின் உள்ளே மாடுகள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால் பஸ்களை இயக்குவதில் டிரைவர்கள் சிரமப்படுகின்றனர். மேலும் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளை முட்டும் சம்பவங்களும் நடக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்ல வரும் மாணவ-மாணவிகள், பஸ்நிலையத்தில் எச்சரிக்கையுடன் நடமாட வேண்டியுள்ளது. எனவே, பஸ்நிலையத்தின் உள்ளே சுற்றித் திரியும் மாடுகளை பிடித்துச் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏ.வி.பி.மோகன சுந்தரம், திருச்செந்தூர்.

மின்விளக்கு வசதி
கோவில்பட்டி புதுரோட்டில் இருவழிச்சாலை அமைக்கும்ேபாது மின்கம்பங்கள் அகற்றப்பட்டன. அதன் பின்னர் இதுவரை மின்கம்பங்கள் வைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் மெயின் ரோடாக இருப்பதால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, மின்விளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
நேதாஜி பாலமுருகன், கோவில்பட்டி.

மயான பாதை வேண்டும்
குலசேகரன்பட்டினம் புறவழிச்சாலையில் தீத்தாபுரம் செல்லும் பாலத்தின் கரையில் மயானம் அமைந்துள்ளது. இங்கு சரியான பாதை வசதி இல்லாததால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் இறுதிச்சடங்கு ஊர்வலத்துக்கு செல்ல முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். எனவே, மயானத்துக்கு செல்லும் பாதையை சரிசெய்து, மயான கொட்டகை அமைத்து கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துரை முருகன், குலசேகரன்பட்டினம்.

மேலும் செய்திகள்