ஊட்டி ஆராய்ச்சி மையத்தில் வனப்பகுதிகளில் நீர் கட்டமைப்புகள் குறித்து வனபாதுகாவலர்களுக்கு பயிற்சி

ஊட்டி ஆராய்ச்சி மையத்தில் வனப்பகுதிகளில் நீர் கட்டமைப்புகள் குறித்து வனபாதுகாவலர்களுக்கு பயிற்சி

Update: 2021-12-07 14:14 GMT
ஊட்டி

ஊட்டி ஆராய்ச்சி மையத்தில் வனப்பகுதிகளில் நீர் கட்டமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து 6 மாநில உதவி வனப்பாதுகாவலர்களுக்கு திறன் பயிற்சி முகாம் தொடங்கியது.

பயிற்சி முகாம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் உள்ள இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் சார்பில், வனப்பகுதிகளில் நீர்பிரி முகடுப்பகுதி மேலாண்மை குறித்து உதவி வனபாதுகாவலர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. முகாமை மைய இயக்குனர் கண்ணன் தொடங்கி வைத்தார்.

 பின்னர் முதன்மை விஞ்ஞானியும், பயிற்சி இயக்குனருமான மணிவண்ணன் பேசியதாவது:-

வனப்பகுதிகளில் போதிய மண் மற்றும் நீர் கட்டமைப்புகள் இல்லாததால் மழைக்காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. இதனால் தண்ணீர் வீணாக கடலில் போய் கலக்கிறது. நீர் பாதுகாப்பு இல்லாததால் மனித-விலங்கு மோதல், வறட்சியால் காட்டுத்தீ போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. 

நீர் மற்றும் மண் பாதுகாப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. மண் பாதுகாப்பு கட்டமைப்பு, வடிகால் ஓடைகள் பராமரிப்பு, மழைநீர் சேமிப்பு, கசிவுநீர் கட்டமைப்பு போன்றவற்றிற்காக இடம் தேர்வு செய்தல் மற்றும் வடிவமைத்தல் போன்றவை குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. 4 நாட்கள் மைய அரங்கில் செய்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது. அதன்பின்னர் களப்பயிற்சி அளிக்கப்படும்.

திட்ட அறிக்கை

கட்டமைப்புகளை செயல்படுத்த செலவுகளை மதிப்பீடு செய்தல், திட்ட அறிக்கை தயார் செய்தல் குறித்தும் பயிற்றுவிக்கப்படுகிறது. நஞ்சநாடு கிராமத்தில் உள்ள நீர்பிடி முகடு பகுதியில் கள பயிற்சி மேற்கொண்டு நீர்பிடி முகடுப்பகுதி மேம்பாட்டிற்கான மாதிரி திட்ட அறிக்கையை தயார் செய்ய உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாடு, சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 45 உதவி வனபாதுகாவலர்கள் கலந்துகொண்டனர். இந்த பயிற்சி முகாம் வருகிற 17-ந் தேதி வரை நடக்கிறது. முகாமில் ஆராய்ச்சி குன்னூர் பாஸ்டியர் இன்ஸ்டியூட் நிறுவன இயக்குனர் டாக்டர் சிவக்குமார் கலந்துகொண்டு பேசினார். முடிவில் விஞ்ஞானி கஸ்தூரி திலகம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்