முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது. 152 அடி உயரம் கொண்ட இந்த அணையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கிவைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 142 அடியை எட்டியது.இதனிடையே கடந்த சில தினங்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து குறைந்து நீர்மட்டம் குறையத்தொடங்கி உள்ளது.
இதையடுத்து முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு தமிழகத்துக்கு வினாடிக்கு 1,200 கனஅடியில் இருந்து 900 கனஅடியாகவும், கேரளாவுக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 989 கனஅடியில் இருந்து 4ஆயிரத்து 521 கனஅடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 141.90 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 421 கனஅடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையளவு மில்லிமீட்டரில் வருமாறு:- பெரியாறு-81, தேக்கடி-28, போடி-4, அரண்மனைப்புதூர்-4.