வியக்க வைக்கும் மாநகராட்சி பள்ளி

வியக்க வைக்கும் மாநகராட்சி பள்ளி

Update: 2021-12-07 13:43 GMT
திருப்பூர்
திருப்பூரில் அனைத்து வசதிகளுடன் வியக்க வைக்கும் வகையில் மாநகராட்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆனால் அந்த பள்ளியில் போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. 
மாநகராட்சி தொடக்கப்பள்ளி
துருதுருவென துடிப்பான மாணவ-மாணவிகள், நல்ல நல்ல அறிவுரைகளை அள்ளி வழங்கும் புத்தகங்கள் நிறைந்த நூலகம், கைப்பந்து, கால்பந்து, செஸ், கேரம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள், தொலைக்காட்சி மூலம் நவீன முறையில் கல்வி கற்பித்தல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுத்தமான பள்ளி வளாகம், சுகாதாரமான கழிப்பறை இத்தனையும் நிறைந்த ஒரு பள்ளிக்கூடம். 
இந்த தகவல்களை கேட்டவுடன் பலருக்கும் நினைவுக்கு வருவது ஏதோ ஒரு தனியார் பள்ளியாகத் தான் இருக்கும். முற்றிலும் ஆச்சரியப்படும் வகையில் இத்தனை நவீன வசதிகளுடன் ஒரு மாநகராட்சி தொடக்கப்பள்ளி இயங்குவதை அறிந்தால் நம்மில் பலருக்கும் ஆச்சரியம் தோன்றும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இவ்வளவு வசதிகள், நவீனங்கள் இருந்தும் அனைத்தும் பயன் இல்லாத நிலையில், அங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது. அப்படி ஒரு பள்ளி தான் திருப்பூர் கொங்கு மெயின்ரோடு எம்.எஸ். நகரில் இயங்கி வரும் மாநகராட்சி தொடக்கப்பள்ளி. பல்வேற சிறப்பம்சங்கள் நிறைந்த இந்த பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாதது தான் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் விசயமாக உள்ளது.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:-
காலியாக உள்ள  ஆசிரியர் பணியிடம் 
கடந்த 2003ம் ஆண்டு 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 14 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட பள்ளி 2008-09- ம் ஆண்டுகளில் 250 மாணவ-மாணவிகள், 5 ஆசிரியர்களுடன் வளர்ச்சியடைந்தது. எம்.எஸ்.நகர், அம்பேத்கர் நகர், திருநீலகண்டபுரம் சுற்றுப்பகுதி, பாரதி நகர், எஸ்.எஸ்.நகர், டி.எஸ்.ஆர்.லே-அவுட், இளங்கோ நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளியில் படித்து வருகின்றனர். அதன் பின் மாணவர்கள் சேர்க்கை குறைந்து 2018-ம் ஆண்டு மீண்டும் 14 மாணவர் என்ற எண்ணிக்கைக்கே வந்தது. அதே ஆண்டு பள்ளியில் தமிழ், ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் தொடங்கப்பட்டதால் தற்போது அந்த பள்ளியில் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை 67 ஆக உள்ளது. ஆனால் இத்தனை மாணவ-மாணவிகள் படிக்கும் பள்ளியில்  ஒரே ஒரு ஆசிரியர் பணியில் இருக்கிறார்.  40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் பள்ளிகள் இயங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த பள்ளியில் பணிபுரியும் அந்த ஒரு ஆசிரியர் தான் தலைமை ஆசிரியராகவும் உள்ளார்.
அரசு சார்பில் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் பள்ளி வளர்ச்சி நிதியில் இருந்து  நவீன வசதிகள் அனைத்தும் பள்ளிக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால்ஆசிரியர் பணியிடம் மட்டும் கடந்த  சில ஆண்டுகளாக காலியாக நிரப்பப்படாமல் உள்ளது. மேலும், இந்த பள்ளியில் இயங்கி வந்த மாணவ-மாணவிகளுக்கான சத்துணவு கூடமும் இடம் மாற்றம் செய்யப்பட்டு திருநீலகண்டபுரத்தில் இருந்து சத்துணவு எடுத்து வரப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை
மாநகராட்சி சார்பில் இந்த பள்ளியில் பணியில் இருந்த துப்புரவு பணியாளர் ஒருவரும் தற்போது பணியில் இல்லை. . 2003ம் ஆண்டு 4 வகுப்பறைகளுடன் தொடங்கப்பட்ட பள்ளி தற்போது வரை அதே கட்டிடத்தில் இயங்கி வருகிறது. பள்ளிக்கட்டிடம் சேதம் அடைந்துள்ளதால் மழைகாலங்களில் தண்ணீர் வகுப்பறைக்குள் புகுந்து விடுகிறது. இந்த பள்ளியில் சேதமடைந்துள்ள கட்டிடத்தை சீரமைக்க  நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியை கொண்ட கட்டிடத்தை சீரமைக்காமல்  வர்ணம் மட்டும் பூசிஉள்ளனர். 
அரசு பள்ளிகளை பல பெற்றோர் புறக்கணித்து தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்தி பிள்ளைகளை படிக்க வைக்கும் நிலையில் அனைத்து வசதிகள் இருந்தும் போதிய மாணவர்கள் சோ்க்கை இருந்தும் ஆசிரியர் பற்றாக்குறையால் ஒரு பள்ளியின் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவது வேதனைக்குரியதாகும். எனவே இப்பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும், சத்துணவு ஊழியர்கள், தூய்மை பணியாளர்களை போதிய அளவில் பணியமர்த்தி ஏழை, எளிய மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


மேலும் செய்திகள்