சொத்து பிரச்சினையில் தம்பதி தற்கொலை
வேடசந்தூர் அருகே, சொத்து பிரச்சினையில் தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மூக்கையகவுண்டனூரில், தோட்டத்து வீட்டில் வசித்து வந்தவர் பொப்பணகவுண்டர் (வயது 75). விவசாயி. அவருடைய மனைவி வெள்ளையம்மாள் (70). இந்த தம்பதிக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
பொப்பண கவுண்டர் தனக்கு சொந்தமான விவசாய நிலங்களை தனது 2 மகன்களுக்கு பிரித்து கொடுக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் திருமணமாகி வெளியூரில் வசிக்கிற அவருடைய 2 மகள்களும் சொத்தில் பங்கு கேட்டதாக தெரிகிறது.
இதனால் பொப்பணகவுண்டர் குடும்பத்தினருக்கு இடையே, கடந்த சில மாதங்களாக சொத்து பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை.
சொத்து பிரச்சினை காரணமாக பொப்பண கவுண்டரும், வெள்ளையம்மாளும் மனம் உடைந்தனர். தங்களது மகன்கள் மற்றும் மகள்களிடம் அவர்கள் சரிவர பேசுவதில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், தாங்கள் வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர். இதனால் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் விஷம் குடித்து தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
இந்தநிலையில் பொப்பணகவுண்டர் வீட்டுக்கு சென்ற உறவினர் ஒருவர், தம்பதி 2 பேரும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து எரியோடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் இறந்து கிடந்த தம்பதியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக பொப்பணகவுண்டரின் மூத்த மகன் அழகர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து பிரச்சினையில் தம்பதி தற்கொலை செய்த சம்பவம், வேடசந்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.