ஜீப் மோதி 1-ம் வகுப்பு மாணவன் பலி

சுல்தான்பேட்டை அருகே ஜீப் மோதி 1-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2021-12-07 12:45 GMT
சுல்தான்பேட்டை,

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டைஅருகே செலக்கரிச்சல் மதுரை வீரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம். கூலித்தொழிலாளி. இவரது மகன் சித்தார்த் (வயது 6). இவன் அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில், நேற்று முன்தினம் சித்தார்த் தனது நண்பர்களுடன் மதுரை வீரன் கோவில் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். 

அப்போது, அங்கு சில வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. 

குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதை தெரியாமல் அதே பகுதியில் தங்கி டிரைவராக வேலை செய்த சண்முகம் என்பவர் தனது ஜீப்பை பின்நோக்கி வேகமாக இயக்கியுள்ளார். இதனை கண்டு விளையாடிக் கொண்டிருந்த சில குழந்தைகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். ஆனால், சித்தார்த் மீது எதிர்பாராவிதமாக ஜீப் மோதியது. 

இதில், சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு, சூலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சித்தார்த்தை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தார். 

இதுபற்றி தகவல் அறிந்ததும் சுல்தான்பேட்டை போலீசார் விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தியதாக ஜீப் டிரைவர் சண்முகத்தை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்